பழநி : பழநி மலைக்கோயிலுக்கு வரும் 12ம் தேதி எடப்பாடி பக்தர்கள் வர உள்ள நிலையில், சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணி இன்று துவங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி ஸ்ரீ பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் ஒன்றாகும். கடந்த 362 ஆண்டுகளுக்கு மேலாக இக்குழுவினர் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு நேரமும் பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இக்குழுவினர் நாளை நள்ளிரவு (பிப்.11) மானூர் ஆற்றங்கரைக்கு வருகின்றனர்.
நாளை மறுதினம் காலை (பிப்.12) பாலாற்றங்கரையில் குளித்து முடித்து விட்டு பழநி மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக கிளம்புவர். சண்முகநதியில் குளித்து முடித்த பின் சிவப்பு, மஞ்சள், நீல நிற குடைகளை ஏந்தி மயில் காவடி, இளநீர் காவடியுடன் பழநி கோயிலை வந்தடைவர். சாயரட்சை பூஜை, ராக்கால பூஜையில் பங்கேற்று அன்றிரவு மலைக்கோயிலிலேயே தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவர்.
எடப்பாடி பகுதியில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேர் பழநிக்கு பாத யாத்திரையாக வருகின்றனர். இவர்களுக்காக இவர்களது குழுவினரே அடிவார பகுதியிலும், பழநி மலைக்கோயிலிலும் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இடப்பற்றாக்குறை காரணமாக மலைக்கோயில், அடிவாரம் என 2 இடங்களில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது. இன்று பஞ்சாமிர்தம் தயார் செய்யும் பணி துவங்க உள்ளது. நாளை மறுதினம் தயார் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் பூஜைக்கு பின் எடப்பாடி குழு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து எடப்பாடியை சேர்ந்த வெங்கடேஷ் கூறியதாவது:
சுமார் 362 ஆண்டுகளாக பாத யாத்திரையாக வந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு மட்டுமே பழநி மலைக்கோயிலில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி உள்ளது. எங்களது குழுவினருக்காக நாங்களே பஞ்சாமிர்தம் தயாரித்து கொள்வோம். சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 10 டன் வாழைப்பழம், 30 கிலோ எடை கொண்ட 250 கரும்புச் சர்க்கரை முட்டைகள், 50 பேரீட்சை மூட்டைகள், 20 தேன் டின்கள், 20 நெய் டின்கள், 20 கற்கண்டு மூட்டைகள், 15 கிலோ ஏலக்காய் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறினர்.