×

10 மாதங்களில் 6 முறை ரெப்போ வட்டி உயர்வு: கடன் வாங்கியவர்கள் தவணை காலம், திருப்பிச் செலுத்தும் தொகை பெருமளவு உயர்வால் அதிர்ச்சி

டெல்லி: ரிசர்வ் வங்கி 10 மாதங்களில் 6 முறை ரேப்போ வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பதால் வீடு, வாகன கடன்களுக்கான தவணை காலமும், திருப்பி செலுத்தும் தொகையும் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால், ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் பல லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டு 6.5%-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018-க்கு பிறகு இறங்குமுகத்திலேயே இருந்த வட்டி விகிதம் 2020 மே மாதத்தில் இருந்து 2022 ஏப்ரல் வரை 4% என்ற ஒரே அளவிலேயே நீடித்தது. ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏறுமுகத்தில் இருந்து வரும் ரெப்போ வட்டி விகிதம் 10 மாதங்களில் 2.5% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், தனி நபர் கடன், வீட்டு கடன், வாகன கடன், தொழில் கடன் மற்றும் இதர கடன் வாங்கியவர்களின் மாதாந்திர தவணை கால மற்றும் செலுத்தும் தவணை தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, ஒரு நபர் கடந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு 7% வட்டிக்கு ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருந்தால் ரூ.30.89 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து மொத்த தொகையாக ரூ.80.89 லட்சம் செலுத்த வேண்டும். அவரது தவணை தொகை ரூ.44,941 என நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு முறையும் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்ட போது ரூ.1,126-லிருந்து தற்பொழுது ரூ.7,270 வரை அவரது தவணை தொகை அதிகரித்திருக்கும். அதே போல வட்டியும் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.12,55,000 வரை அதிகரித்திருக்கும். மொத்தமாக 6 முறை உயர்த்தப்பட்ட ரெப்போ வட்டியின் தாக்கத்தால் மொத்தமாக ரூ.13.09 லட்சம் கூடுதலாக செலுத்தும் நிலைக்கு அந்த நபர் தள்ளப்படுவர்.  

இதேபோல ரெப்போ வட்டி உயர்வின் தாக்கத்தால் தவணை காலமும் பல ஆண்டுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் என்ற தவணையில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருப்பின் ரெப்போ வட்டி விகிதம் உயர்வுக்கு ஏற்ப தற்பொழுது அந்த தவணை காலம் 22 ஆண்டுகள் 5 மாதங்களாக அதிகரித்திருக்கும். இந்த 10 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததால் மட்டுமே இந்த குறிப்பிட்ட கடனுக்கான வட்டி தொகையாக கூடுதலாக ரூ.40.41 லட்சம் செலுத்த வேண்டும். தவணை காலமும், வட்டியும் அதிகரித்து இருப்பதால் மொத்தமாக செலுத்த வேண்டிய கடன் ரூ.80.89 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியே 21 லட்சமாக உயரும் என்பது கடை வாங்கியவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.   


Tags : Repo, interest, increase, tenure, repayment amount, shock
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்