×

மண்டபம் அருகே நடுக்கடலில் வீசிய ரூ.10 கோடி தங்கம் மீட்பு

ராமநாதபுரம்: மண்டபம் அருகே நடுக்கடலில் மூட்டையில் வீசிய ரூ.10 கோடி தங்கக்கட்டிகள், 32 மணிநேர தேடுதலுக்கு பின் கண்டெடுக்கப்பட்டது. இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து, ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடலில் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது மண்டபம் தென் கடற்பகுதிக்கு வந்த பைபர் படகை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றபோது, படகில் இருந்தவர்கள் ஒரு மூட்டையை கடலில் வீசினர். அப்படகை சுற்றி வளைத்த அதிகாரிகள் படகிலிருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.

இதில் வேதாளையை சேர்ந்த ஒருவருக்கு இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததாகவும், ரோந்து படகை கண்டதும், தங்கக்கட்டி மூட்டையை கடலில் எறிந்ததாகவும் கூறினர். இதையடுத்து, கடலில் வீசிய மூட்டையை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தேடினர். எதுவும் சிக்காததால் ஆழ்கடலில் முத்து குளிப்போர், கடல் விளையாட்டு வீரர்கள் மூலம் நேற்று முன்தினம் மாலை வரை தேடினர். இரவு நேரம் தொடங்கியதால், தேடும் பணி நிறுத்தப்பட்டு, நேற்று காலை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தென் கடல் ஆழப்பகுதியில் கிடந்த மூட்டையை 32 மணிநேர தேடுதலுக்குப் பின் தூத்துக்குடி முத்துக்குளிப்பு மீனவர் கண்டெடுத்தார்.
அதை பிரித்து பார்த்தபோது 17.74 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.10.50 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Mandapam , Recovery of Rs 10 crore gold washed in the middle of the sea near Mandapam
× RELATED பாம்பன் சுவாமி கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை