தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு டிவிட்டர் பக்கம் முடக்கம்: போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தங்களது சமூக வலைதளம் மூலமாக அரசியல் தொடர்பான பிரசாரங்களை செய்து வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, முக்கிய தலைவர்களின் பேச்சுகள், சிறுபான்மை  மக்களுக்காக காங்கிரஸ் கட்சி செய்த திட்டங்கள், செயல்பாடு குறித்த  விவரங்கள் இந்த டிவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால், டிவிட்டர் மூலமாக பல்வேறு பிரசாரங்களை சிறுபான்மை பிரிவு செய்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் திடீரென நேற்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. அதில், ‘வாவ் ஸ்டோர்’ என்ற முகப்பு போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரபு மொழியில் பயோ விவரங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் டிவிட்டர் பக்கத்தை யார் முடக்கினர், எதற்காக முடக்கினர் என்பது  தெரியவில்லை.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதில், ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு டிவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு இ-மெயில் ஐடி மாற்றப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட டிவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், உடனே முடக்கப்பட்ட டிவிட்டர் பக்கத்தை மீட்டு, மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இதுபோன்று டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதால் குளறுபடி நடக்க வாய்ப்பு உள்ளது’’ என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: