×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தடை: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வருகிற 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 27ம் தேதி (திங்கள்) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதலுக்கும், பரப்புதலுக்கும் வரையறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஒரு பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.ஒரு இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளில் இருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். இந்த பிரிவின் விதிமுறைகளை மீறும் நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

அதன்படி, வருகிற 16.2.2023 (வியாழன்) காலை 7 மணியில் இருந்து 27.2.2023 (திங்கள்) மாலை 7 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகிற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Erode ,East Constituency ,Election Commission of India , Erode East Constituency By-election Ban on Polling from 16th to 27th: Election Commission of India Notification
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்