×

அண்ணாசாலையில் கட்டிடம் விழுந்ததில் இளம்பெண் பலி ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் போது அந்த பகுதியில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் மதுரையை சேர்ந்த பத்மபிரியா என்ற 22 வயது ஐடி ஊழியர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

 இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆயிரம்விளக்கு போலீசார், ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோரை கைது செய்தனர். கட்டிட உரிமையாளர் தலைமறைவாக உள்ளார்.கடந்த  ஜனவரி 29ம் தேதி கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மான், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டிடத்தை  இடிக்கும் முன் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் நடந்த போது அவர் அங்கு இல்லை என்றும் அப்துல் ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன்,  எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் கட்டிடம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்பாக புலன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. முதல் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளம்பெண் பலியாகியுள்ளதை கருத்தில் கொண்டும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும், கைது செய்யப்பட்டு குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Bail ,Annasalai ,Chennai Principal Sessions Court , Bail plea of contractor killed in building collapse at Annasalai dismissed: Chennai Principal Sessions Court orders
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல்...