சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஈரோட்டில் வரும் மே 5ம் தேதி நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாடு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடசென்னை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். கூட்டத்தில், 40வது வணிகர் தினம் ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடைபெறுவது குறித்து மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் மணி, ஆவடி மாநகராட்சி அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் துரைராஜன், மற்றும் மாவட்ட துணைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவராக ஜெயபால், செயலாளராக ஹாஜி முகம்மது, பொருளாளராக மகேஷ் மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஈரோட்டில் வரும் மே 5ம் தேதி, 40வது வணிகர் தினம் நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பாக கிளைச் சங்கங்களிலிருந்து சுமார் 5000 வணிகர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் பங்கேற்பது என உறுதி எடுக்கப்பட்டது.
அம்பத்தூர் எஸ்டேட் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பேரமைப்பின் வடசென்னை வடக்கு மாவட்டம் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. வணிக உரிமங்கள் சம்பந்தமாக வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், பாடி முதல் திருநின்றவூர் வரை 21 கி.மீ சாலை விரிவாக்கம் சம்பந்தமாக வணிகர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு தீர்வு காணவும் பேரமைப்பின் மாநில தலைமையின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
