×

மலேசியா, துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய 4 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பயணிகள் கைது

சென்னை: துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் அடுத்தடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன. இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானமும் சென்னை வந்தது. இந்த 3 விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த 3 விமானங்களில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி விசாரணை நடத்தியதோடு, அவர்கள் உடமைகளையும் பரிசோதித்தனர். அப்போது மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணியின் டிராலி டைப் சூட்கேஸை சந்தேகத்தில் சோதனை செய்தனர். அதில் கொடுக்கப்பட்டிருந்த பைபர் பீடிங்கிற்குள், தங்க சுருள் கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அதேபோல், துபாயில் இருந்து வந்த 2 விமானங்களில் வந்த 2 ஆண் பயணிகளின் சூட்கேஸ்களிலும் தங்க உருளைகள், தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 3 விமானங்களில் வந்த 3 பயணிகளிடம் இருந்தும் மொத்தம் சுமார் 4 கிலோ எடையுடைய தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் 3 பயணிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Malaysia, Dubai ,Chennai , Seizure of 4 kg of gold smuggled from Malaysia, Dubai to Chennai: 3 passengers arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...