×

பூந்தமல்லியில் பரபரப்பு; கர்ப்பமாக இல்லாமலேயே குழந்தை பிறந்ததாக நாடகம்: கடத்தப்பட்டதாக மருத்துவமனையில் பெண் ரகளை

சென்னை: பூந்தமல்லி அருகே, கர்ப்பமாக இல்லாமலேயே குழந்தை பெற்றதாகவும், அதை மருத்துவமனை ஊழியர்கள் கடத்தி விட்டதாகவும் பெண் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், கணவர் குடும்பத்தை நம்பவைப்பதற்காக நடித்தது அம்பலமானது.

பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவரின் மனைவி, நேற்று  முன்தினம் இரவு வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக தனது தாயுடன் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்த அவர், தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என கூறி மருத்துவர்கள் எடுத்து சென்றதாகவும், பின்னர் டீ குடித்துவிட்டு வருமாறு மருத்துவர்கள் கூறியதால், வெளியே வந்துவிட்டு திரும்பி சென்றபோது, குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்து வைத்து கொண்டு, தனக்கு குழந்தை பிறக்கவில்லை என ஏமாற்றுவதாக கூறி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் தனக்கு பிறந்த குழந்தையின் போட்டோ என செல்போனில் பிடித்து வைத்திருந்த பச்சிளம் குழந்தையின் போட்டோவை காட்டினார். போட்டோவை கணவரின் குடும்பத்தினருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அவரது கணவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவேற்காடு போலீசார் மருத்துவமனைக்கு வந்து, ஊழியர்கள் மற்றும் பெண்ணின் கணவர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் உண்மையிலேயே கர்ப்பம் தரிக்கவில்லை என்பதும், கர்ப்பமானதாக கூறப்பட்ட நாள் முதல் இதுவரை எந்த மருத்துவமனையிலும் எந்தவிதமான சிகிச்சையும், பரிசோதனையும் செய்யவில்லை என்பதும்,  பிரசவத்திற்காக வந்த தனியார் மருத்துவமனையிலும் எந்தவிதமான அனுமதி சீட்டும் பெறவில்லை  என்பதும், அவராகவே மருத்துவமனைக்கு வந்து சிறிது நேரத்தில் குழந்தை பிறந்ததாகவும், மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைய எடுத்து வைத்துகொண்டு ஏமாற்றுவதாகவும் கூறி பிரச்னை செய்துள்ளார் என்பதும்  தெரியவந்தது.

இதையடுத்து, அப்பெண்ணிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து, போலீசாரின் ஆலோசனைபடி பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கர்ப்பமானதற்கான அறிகுறியோ, குழந்தை பிறந்ததற்கான அறிகுறியோ இல்லை என்பதும்,  மேலும் திருமணமாகி ஒரு வருடம் ஆனதால் தான் கர்ப்பமடைந்ததாக கணவர் குடும்பத்தை நம்ப வைத்துள்ளார். இதற்காக வயிற்றில் துணியை சுற்றிக்கொண்டு கர்ப்பிணி போல நடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு  வளைகாப்பு  நடத்தியுள்ளனர். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, தனது தாயுடன் வந்தவர், கர்ப்பமாக இருப்பதாகவும், வயிறு வலிப்பதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அப்போது, டாக்டர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க இயலாது என கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்த அவர், சிறிது நேரத்தில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை கணவருக்கு அனுப்பி வைத்துவிட்டு பிரச்னை செய்துள்ளார்.

கர்ப்பமாகாமலேயே கர்ப்பிணி போல இருப்பதாகவும், குழந்தை பிறந்ததாகவும் நாடகமாடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொலைக்காட்சி தொடர்களில் வருவதுபோல, மனைவி நாடகமாடிய விஷயம் தெரிந்ததால் அப்பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்து திரும்பி சென்றனர். இதையடுத்து அந்த பெண்ணையும், அவரது தாயாரையும் கடுமையாக எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பூந்தமல்லி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Bustle , Bustle in Poontamalli; Child born without pregnancy Drama: Woman complains of kidnapping in hospital
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு