சென்னை: சென்னை கடற்கரைகளில் குப்பை சேருவதை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தூய்மையான கடற்கரை பட்டியலில் பெசன்ட்நகர் கடற்கரை முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் விரைவில் உலக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலின் அழகை ரசிப்பது என்றால் அனைவருக்கும் பிடித்தமானதுதான். அதிகாலையிலும், மாலை வேளையிலும் கடல் அலைகள் ஓடி வந்து கால்களை தொட்டுச் செல்லும் வகையில், கடற்கரையில் பொடிநடையாய் நடந்து சென்றால் மனமடையும் பரவசத்திற்கு ஈடில்லை என்றே கூற வேண்டும். சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரது விருப்பப் பட்டியலிலும் கட்டாயமாக இருப்பது கடற்கரைகள் தான்.
சென்னையில் வசிக்கும் மக்களுக்கும் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக கடற்கரைப் பகுதிகள் இருக்கின்றன. காலையில் சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமிக்கும் அழகான காட்சிகளை காண்பது, நடைபயிற்சி செய்வது, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பொழுது போக்குவதற்கும் கடற்கரை பகுதிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. உலகின் நீளமான 2வது கடற்கரையான மெரினா கடற்கரை உள்ளது. சென்னையை பொறுத்தவரை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர், நீலாங்கரை, பாலவாக்கம், அக்கரை ஆகிய 7 கடற்கரைகள் உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரையும் கடற்கரைப் பகுதிகள் கவர்ந்து வருகின்றன.
சென்னை வரும் சுற்றுலா பயணிகள் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளை பார்க்காமல் போக மாட்டார்கள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட கடற்கரை பகுதிகள் காலங்கள் மாற மாற அங்கு குப்பை சூழும் ஒரு இடமாக மாறிய நிலைமை ஏற்பட்டது. மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என கடற்கரையை பார்க்க வருபவர்கள் தூக்கி எறிபவைகளால் குப்பை நிறைந்த பகுதியாக மாறியது.
கடற்கரைகளில் காணப்படும் குப்பை பெரும்பாலும் பிளாஸ்டிக்குகள் தான் அதிகம். குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பிளாஸ்டிக்குகள் பெருமளவில் கடற்கரைகளை ஆக்கிரமித்திருந்தாலும் 2019 மற்றும் 2021ல் 60 சதவீதமாக இருந்த மணலில் பிளாஸ்டிக்குகள் 2022ல் 40 சதவீதமாக குறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகிறது. விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் துப்புரவு முயற்சிகள் காரணமாக நகரங்களில் உள்ள கடற்கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவது குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில்தான் இந்தியா முழுவதும் கடற்கரையை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்து கொண்டால் கடல்நீர் மாசடைவது குறையும். அதோடு ஏராளமான சுற்றுலா பயணிகளையும் ஈர்க்க முடியும். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே கடற்கரை பகுதிகளை பாதுகாப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. எனவே, சென்னை கடற்கரையை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, பொதுமக்கள் கடற்கரை பகுதிகளை சுத்தமாக பாதுகாக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கும், மக்காத குப்பையை சேகரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமீறும் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரந்தோறும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், கடற்கரை பகுதிகளில் உள்ள தூய்மையின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதோடு, அங்கு பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், அதிகாரிகள் பாராட்டப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி உள்ள பட்டியலில் தூய்மையான கடற்கரை பட்டியலில் சென்னை பெசன்ட் நகர் முதலிடத்தில் உள்ளது. கடந்த முறை 3ம் இடத்தில் இருந்த மெரினா கடற்கரை தற்போது 2ம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதையடுத்து 2வது இடத்தில் திருவான்மியூர் கடற்கரை, 4வது இடத்தில் திருவொற்றியூர், 5வது இடத்தில் பாலவாக்கம், 6வது இடத்தில் அக்கரை உள்ளது. 7வது இடத்தில் நீலாங்கரை கடற்கரை உள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கடற்கரைகள் அழகுபடுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை கடற்கரைகளை தூய்மையாகும்பட்சத்தில் உலக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தரம் உயரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
