×

சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அமெரிக்க எல்லையில் பறந்த 4 சீன பலூன்கள்: பென்டகன் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இதற்கும் முன்பும் 4 சீன பலூன்கள் பறந்ததாக பென்டகன் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் அணுமின்நிலையம் மீது சீன உளவு பலூன் ஒன்று பறந்தது. கடந்த 30ம் தேதி மொன்டானா பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிப்.4ம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் தென் கரோலினா கடற்கரையில்  அதிபர் பைடன் உத்தரவுப்படி போர் விமானங்கள் சீன பலூனை சுட்டு வீழ்த்தியது. இந்த பலூன்  தங்களுடையது என்பதை ஒப்புக்கொண்ட சீனா,  அது உளவு பலூன் இல்லை. வானிலை கண்காணிப்பிற்காக  அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் திசை மாறிவிட்டது என்று தெரிவித்தது. இருப்பினும் சுட்டு வீழ்த்திய பலூன் பற்றி ஆராய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுபற்றி அமெரிக்க  பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பாட் ரைடர்  கூறுகையில், ‘ சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் பாகங்களை மீட்கும் நடவடிக்கையை அமெரிக்க வடக்கு கடற்படை மேற்கொண்டு வருகிறது. நீச்சல் நிபுணர்கள், வெடிமருந்து ஆயுத தொழில்நுட்ப வல்லுநர்கள் கடலுக்கு அடியில் பலூன் பாகங்களை மீட்கும் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆளில்லா வாகனமும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

சீனாவில் இந்த நடவடிக்கை குறித்து பென்டகன் கூறுகையில்,’ அமெரிக்கா மீது சீன பலூன் பறப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு  அமெரிக்க நிலப்பரப்பின் மேல் 4 பலூன்கள் பறந்துள்ளன என்பது அமெரிக்காவிற்குத் தெரியும்.  இது ஒரு பெரிய சீன கண்காணிப்பு  திட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் மதிப்பிடுகிறோம். இந்த திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது. இதை தவிர வேறு விவரங்களுக்கு நாங்கள் செல்லப் போவதில்லை. அவர்கள் எங்கள் முக்கிய தளங்களைக் கண்காணிக்கப் பார்க்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் என்பதை நாங்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைத் தவிர, அவர்கள் கண்காணித்தவற்றை நாங்கள் பார்க்கப் போவதில்லை’ என்று தெரிவித்து உள்ளது.


Tags : US border ,Pentagon , 4 Chinese balloons flew over US border before being shot down: Pentagon info
× RELATED பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு