×

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் 12ம் தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. அதையொட்டி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது. மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்த சீசனில் சபரிமலையில் பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்க்க முடிந்தது. இதனால் கோயில் வருமானமும் அதிகரித்தது. மண்டல, மகரவிளக்கு சீசனில் கோயிலின் மொத்த வருமானம் ₹351 கோடியை தாண்டி உள்ளது. இது ஒரு புதிய சாதனையாகும்.

நாணயங்களை எண்ணி முடிக்கும் பணி இன்னும் முடியவில்லை. இதில் 520 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாணயங்கள் மட்டுமே ₹20 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறப்பார். நடை திறந்த பிறகு அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (13ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும்.

17ம் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். நடை திறக்கப்படும் 12ம் தேதி மதியம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையே தரிசனத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல், பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுன்டர்கள் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Tags : Sabarimala ,Month Pujas , 12th Walk Opening at Sabarimala for Masi Month Pujas: Online Booking Started
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு