×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில்  போட்டியிட அமமுகவிற்கு எந்த தடையுமில்லை. கேட்ட சின்னம் கிடைக்காததால் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது போல, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியையும் புறக்கணித்துள்ளோம்.

நாங்கள் எந்த அணியிலும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் புதுக் கூட்டணி உருவாக்குவது பற்றி யோசிப்போம். திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்.இரட்டை இலை கிடைத்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது, தீயவர்கள் கையில் இரட்டை இலை உள்ளது. ஆகையால் இரட்டை இலைக்கு இனி சக்தி கிடையாது. பழனிசாமி கம்பெனியால் வெற்றி பெற முடியாது.

நாங்கள் பெரிய கட்சி கிடையாது, நல்ல வாக்கு சதவீதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தோம், வெற்றிக்காக அல்ல. ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியையும் ஆதரிக்க மாட்டோம், துரோக சக்திகளான அதிமுகவையும் ஆதரிக்க மாட்டோம். ஓட்டு யாருக்கு என்பதை தொண்டர்களே முடிவு செய்து கொள்வார்கள். பாஜவுடன் இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்பதால் தேர்தலை புறக்கணிக்கவில்லை, சின்னம் ஒதுக்காதது மட்டுமே புறக்கணிப்பிற்கு காரணம். யாருக்காகவும் தேர்தலில் இருந்து விலகவில்லை நாங்கள் சுயமாக முடிவெடுத்து இயங்கக்கூடியவர்கள்.

ஈரோடு கிழக்கில் பங்காளிகள்(அதிமுக) இப்போதுதான் தங்களிடம் உள்ள பணத்தை அங்கு செலவழிக்க தொடங்கி உள்ளனர். மக்களிடம் பெற்ற வரிப்பணத்தை வாக்குகளுக்கு பணமாக இப்போது கொடுக்கின்றனர். பன்னீர் செல்வம் எனது முன்னாள் நண்பர். அவரது நிலைப்பாடு குறித்து நான் கருத்து கூற முடியாது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜ என இரண்டு தேசிய கட்சிகள் போட்டியில் உள்ளன. அவர்களில் யாராவது அழைத்தால் அவர்களுடன் கூட்டணி வைப்போம் யாரும் அழைக்கவில்லை என்றால்  தனித்து போட்டியிடுவோம். அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில்தான் நான் இருந்தேன். இப்போது அமமுக எனும் இயக்கத்தை ஆரம்பித்து விட்டேன். வேட்பாளர் பெயரை சொல்லாமல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்போம் என பன்னீர் செல்வம் அணியினர் கூறுவது சிரிப்பாக உள்ளது. 


Tags : DTV ,Dinakaran , Erode East by-election, AIADMK no support, DTV Dhinakaran
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி