சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட செயற்கைக்கோள் இணைப்புடன் இயங்கும், சிசிடிவிகள் பொருத்தப்பட்ட மொபைல் கட்டுப்பாட்டு வாகனம் கடந்த டிசம்பர் மாதம் வேலூர் காவல்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வாகனத்தில் ஜாமர் கருவிகளுடன், 360 டிகிரி சுழலும் வகையில் 6 அதி நவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் எங்கு சென்றாலும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்தையும் தெளிவாக பார்க்கவும், கண்காணிக்கவும் முடியும். இரவு நேரங்களில் ரோந்து வாகனங்களின் செயல்பாடுகள், மற்றும் திருவிழா காலங்கள், பண்டிகை காலங்கள், போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடக்கும் பகுதிகளில், இந்த வாகனத்தை நிறுத்தி, சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்து குற்றங்களை தடுக்க முடியும்.
மேலும், டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் வசதியும் இந்த வாகனத்தில் உள்ளது. வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 6 திரைகள் மூலம் வேறு மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைகளுடன் செயற்கை கோள் உதவியுடன் இணைக்கப்பட்டு, அந்த நகரத்தின் முக்கிய நிகழ்வுகளை தேவையான இடத்தில் இந்த நவீன வாகனத்தின் மூலம் கண்காணிக்க முடியும். வேலூர் காவல்துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் மொபைல் வாகனம், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடிய கார்த்திகை தீபத்தன்று இதன் செயல்பாடுகள் சோதனை செய்யப்பட்டது.
அதில் இந்த மொபைல் கட்டுப்பாட்டு வாகனம் வெற்றிகரமாக செயல்பட்டது. மேலும், கூட்ட நெரிசல்களில் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் பழைய குற்றவாளிகளை புகைப்படங்கள் வைத்து அடையாளம் காணம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் செயற்கைக்கோள் இணைப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்ட காவல்துறையின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையுடனும் உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் வசதிகள் உள்ளது.
வேலூர் காவல்துறையில் வெற்றிகரமாக இந்த வாகனம் இயங்கி வருவதால், சென்னை மாநகர காவல்துறையில் இந்த வாகனத்தை அறிமுகம் படுத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முடிவு செய்துள்ளார். இதனால் நேற்று வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்த அதிநவீன வாகனம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த வாகனத்தை கூடுதல் கமிஷனர் அன்பு, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அதன் செயல்படுகள் குறித்து வேலூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதையடுத்து செயற்கை கோள் இணைப்புடன் இயங்கக்கூடிய நடமாடும் அதிநவீன மொபைல் கட்டுப்பாட்டு வாகனம் சென்னை மாநகர காவல்துறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
