பல்லாவரத்தில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், செல்போன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

பல்லாவரம்: பல்லாவரத்தில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ₹15 ஆயிரம் பணம், லேப்டாப் மற்றும் செல்போனை திருடிய ஆசாமிகளை பிடிக்க முயன்றபோது, பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

பல்லாவரம், நேரு நகரை சேர்ந்தவர் தவ்ஹீப் அகமது (31), பல்லாவரம் பெரிய பாளையத்து அம்மன் கோயில் தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், தவ்ஹீப் கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், நள்ளிரவு இவரது கடையின் பூட்டுகளை உடைத்த கொள்ளையர்கள், கல்லாவில் இருந்த ₹15 ஆயிரம் பணம், 3 விலையுயர்ந்த லேப்டாப்கள் மற்றும் 5 செல்போன்களை திருடி உள்ளனர்.

பின்னர், அருகில் உள்ள பெரோஸ் கான் என்பவரது டீக்கடையை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையர்கள் திருடி உள்ளனர். தொடர்ந்து, அருகில் இருந்த மற்றொரு  போட்டோ ஸ்டூடியோ கடையின் பூட்டுகளை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே, கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த பட்டா கத்தியை காட்டி, மிரட்டி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், கொள்ளையர்கள் 3 பேர் சாவகாசமாக வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு சென்றது தெளிவாக பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் நிம்மதியை இழந்து தவிக்கின்றனர். எனவே, போலீசாரின் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி, பெருகி வரும் குற்றச் செயல்களை தடுக்க தாம்பரம் காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துரைப்பாக்கம்: திருவான்மியூர் அவ்வை நகரை சேர்ந்தவர் இர்பான் (28), அப்பகுதியில் செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இவர், வியாபாரம் முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது, உள்ளே சென்று பார்த்தபோது, பல ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், உதிரி பாகங்கள், ₹5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து, திருவான்மியூர் காவல் நிலையத்தில் இர்பான் புகார் அளித்தார். போலீசார் வழ்ககு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: