சென்னை: மதுரையில் நடந்த பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் நான்காவது தேசிய மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசியதாவது: கிறித்துவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை கழக அரசு செய்து கொடுத்துள்ளது. தேவாலயங்களைச் சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது, கிறிஸ்தவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதிக்காக மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் இணையத்தின் மூலம் பெறுவதை எளிமையாக ஆக்கி இருக்கிறோம். சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட இருக்கிறது.
கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக துவங்கிட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவோம் என உறுதி அளிக்கிறேன். மக்களுக்காக உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இங்கு வழங்கப்பட்ட பாராட்டுகள் அதிகம் உழைக்கத் தூண்டுகோலாக அமையும். இது எனது அரசு அல்ல, நமது அரசு. உத்தரவிடுங்கள். நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
