இந்தியா - ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நாக்பூரில் இன்று தொடங்குகிறது. உலக தரவரிசையிலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியலிலும் ‘டாப் 2’ இடங்களில் உள்ள அணிகள் மோதும் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. ரோகித் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 25 தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் படைத்துள்ள உலக சாதனையை மேலும் நீட்டிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

கார் விபத்தில் படுகாயம் அடைந்த இளம் விக்கெட் கீப்பட் ரிஷப் பன்ட் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வருவதால், அவருக்கு பதிலாக இஷான் அல்லது கர் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. அஷ்வின், அக்சருடன் 3வது ஸ்பின்னராக   குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீச்சு கூட்டணி வியூகம் இருக்கும். அதிரடி பேட்ஸ்மேன்களும் அதிகம் இருப்பதால், இந்தியா இந்த போட்டியை மட்டுமின்றி தொடரையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறவும் இந்த வெற்றி அவசியம் என்பதால் இந்திய வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதே சமயம், தற்போதைய ‘நம்பர் 1’ அணியாக உள்ள ஆஸ்திரேலியா,  2வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆதிக்கத்தை நிலைநாட்டும் உறுதியுடன் களமிறங்குகிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான  ஆஸி. அணி இந்தியாவுக்கு  எதிரான தொடரை வெல்வதுடன், இங்கிலாந்து அணியுடனான ஆஷஸ் தொடரிலும் (5 போட்டி) சாதிக்க வேண்டும். அப்போதுதான் முதல் இடத்தை தக்க வைப்பதுடன், பைனலில் விளையாடும் வாய்ப்பையும் பெற முடியும். முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் கிரீன், ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது ஆஸி. அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்திருந்தாலும், அந்த அணியின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: ரோகித் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஆர்.அஷ்வின், கர் பரத், இஷா கிஷன், ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, கோஹ்லி, குல்தீப், ஷமி, சிராஜ், அக்சர், புஜாரா, ஷுப்மன் கில், ஜெய்தேவ் உனத்கட், சூரியகுமார், உமேஷ்.

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித் (துணை கேப்டன்), ஆஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், லேன்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேட் ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.

* இரு அணிகளும் 102 டெஸ்டில் மோதியுள்ளதில் ஆஸி. 43-30 என முன்னிலை வகிக்கிறது (28 டிரா, ஒரு ‘டை’)

* 27 டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளதில் ஆஸி. 12, இந்தியா 10ல் வென்றுள்ளன. 5 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

* கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் இந்தியா 4 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. ஆஸி தனது கடைசி 5 டெஸ்டில் ஒரு டிரா, தொடர்ச்சியாக 4 வெற்றியுடன் சூப்பர் பார்மில் உள்ளது.

* இந்த 2 அணிகளும் நேருக்கு நேர் மோதிய கடைசி 5 டெஸ்டில் இந்தியா 2 வெற்றி, ஆஸி. 1 வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

* 2013, 2017ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய ஆஸி. டெஸ்ட் அணியில் உஸ்மான் கவாஜா இடம் பெற்றிருந்தாலும், இதுவரை களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காதது  

குறிப்பிடத்தக்கது.

* 8 டெஸ்டில் 47 விக்கெட் எடுத்துள்ள அக்சர் இன்னும் 3 விக்கெட் கைப்பற்றினால், டெஸ்ட் போட்டிகளில் அதிவிரைவாக 50 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வினுடன் (9 டெஸ்ட்) பகிர்ந்துகொள்ளலாம்.

* நாக்பூர் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மழை வருவதற்கான வாய்ப்பு இல்லை.

Related Stories: