×

குமரியில் கந்து வட்டி தொழிலில் கொடி கட்டி பறக்கும் பெண்கள்: காவல்துறை விசாரிக்க தயக்கம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில்  பெண்கள் வட்டி தொழிலில் கொடி கட்டி பறக்கின்றனர். கந்துவட்டி, மீட்டர் வட்டி என்ற பெயரில் பெண்கள் கடன் கொடுத்து வசூலிப்பதால், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்கும் நிலை உள்ளது. குமரி மாவட்டத்தில் கந்து வட்டி, மீட்டர் வட்டி பெயரில் பல்வேறு வகைகளில் கடன் கொடுக்கப்படுகிறது. மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக கடன் வாங்கியவர்கள், சரியான நேரத்தில் கடன் தொகையை செலுத்தியும் கூட அவை வட்டிக்கே கழிந்து விட்டதாக கடன் கொடுத்தவர்கள் கூறுகிறார்கள். இதனால் கடன் வாங்கியவர்கள் சொத்துக்களை இழந்ததுடன், மானத்தையும் இழந்து கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

கந்து வட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் காவல்துறையினரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். காவல்துறை, ரவுடியிசத்தை வைத்து மிரட்டுவதால், உயிருக்கு பயந்தே பலர் கந்து வட்டி வசூலிப்பாளர்களை காட்டி கொடுப்பதில்லை. இன்னும் சில கந்து வட்டி வசூலிப்பு கும்பல், கடன் வாங்கியவர்களின் குடும்ப பெண்களை பகடை காயாக வைத்து மிரட்டுவதால், வேறு வழியின்றி பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாகி விடும் நிலை உள்ளது.
குமரி மாவட்டத்தில் காய்கறி சந்தை வியாபாரிகள் முதல் பெரிய, பெரிய முதலாளிகள் வரை இந்த கந்து வட்டி கும்பலிடம் சிக்கி திணறி வருகிறார்கள்.

கந்து வட்டி வசூலில் அரசியல் முக்கிய புள்ளிகளும் கோலோச்சி வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பலர் கந்துவட்டி கொடுத்து வருகிறார்கள்.
கந்து வட்டி வசூலிப்பாளர்கள் மீது உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத்  உறுதி அளித்துள்ளார். ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் எப்படி புகார் அளிக்க முடியும் என்ற எண்ணத்தில் மிகவும் மவுனமாகி விடுகிறார்கள். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் தற்போது பெண்கள் கந்து வட்டி தொழிலில் கோலோச்சி வருகிறார்கள்.

5 சதவீதம், 7 சதவீதம், 10 சதவீத வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்க தொடங்கி இருக்கிறார்கள். நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பெண்கள் வட்டி தொழிலில் இறங்கி உள்ளனர். தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் சில சுய உதவிக்குழு நடத்தி வரும் பெண்கள் சிலரை, தங்களது பணியாளர்களாக நியமித்து அவர்கள் மூலம் பெண்களுக்கு கடன் கொடுக்கிறார்கள். இது தவிர பெண்கள் சிலர் பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று, அந்த கடன் தொகையை மீட்டர் வட்டி, கந்து வட்டி பெயரில் குடும்ப பெண்களுக்கு கொடுத்து வசூலிக்கிறார்கள்.

குழந்தைகளின் கல்வி செலவு, கணவரின் மருத்துவ செலவு உள்பட பல்வேறு அவசர தேவைகளுக்காக கடன் தொகையை வாங்கிய பெண்கள், அந்த கடன் தொகைக்கு மேல் செலுத்தியும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள். கடன் கொடுத்த பெண்கள் கும்பலாக சென்று மிரட்டுவதால், கடன் வாங்கிய பெண்கள் கடைசியில் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கந்துவட்டி வசூலிக்கும் பெண்கள் மீது, உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால் கூட, நீங்கள் எஸ்.பி. அலுவலகம் செல்லுங்கள்.

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்புங்கள் என காவல் நிலையத்தில் உள்ள போலீசார் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்கள். இதனால் கடன் வாங்கி கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். இதனால் கடைசியில் தற்கொலை முடிவை தான் ஆயுதமாக எடுத்து, தனக்கு தானே உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். பெண்கள் வட்டி தொழிலில் கொடி கட்டி பறக்க தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்கு வந்து புகார் அளிக்கலாம் என்ற நிலையை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Gandu ,Kumari , Women who fly the flag of usury business in Kumari: Police reluctant to investigate
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...