நாக்பூரில் அசத்தப்போவது யார்? இந்தியா-ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்: டாப் 2 அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு

நாக்பூர்:ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் நாக்பூர் விதர்பா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சொந்த மண்ணில் இந்தியா மிகவும் பலமிக்கதாக உள்ளது. இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கேப்டன் ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக சுப்மன் கில் களம் இறங்குவார் என தெரிகிறது. புஜாரா, விராட் கோஹ்லி தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்வர்.

ரிஷப் பன்ட் இல்லாததால் கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக இடம்பெறுகிறார். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி உள்ளது. பிட்ச் முதல் நாளில் இருந்தே சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியா ஆல் ரவுண்டர்கன் ஜடேஜா, அஸ்வின், அக்சர்பட்டேல், குல்தீப் யாதவ் என 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. வேகத்தில் முகமது சிராஜ், முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும். மறுபுறம் ஆஸ்திரேலியா  மிகவும் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா, வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி என சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது.

காயம் காரணமாக கேமரூன் கிரீஸ் முதல் டெஸ்ட்டில் விலகியதால், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் இடம்பெறுகிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், ஹேசல்வுட் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆடாத நிலையில், நாதன்லயன், ஆஷ்டன் அகர் ஆகிய ஸ்பின்னர்களுடன், வேகத்தில் கேப்டன் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் களம் இறங்குவர். 2004ம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் ஆஸி. டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அதனால் இந்த முறை தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய உத்தேச அணி: சுப்மன்கில், ரோகித் சர்மா (கே), புஜாரா, விராட் கோஹ்லி,கேஎல் ராகுல் ,  / சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பாரத் (வி.கே.),  ஜடேஜா, அஷ்வின், முகமது ஷமி, குல்தீப் யாதவ் / அக்சர் பட்டேல், முகமது சிராஜ். ஆஸி. உத்தேச அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி (வி.கி.), ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், ஆஷ்டன் அகர், நாதன் லியான், பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டியலில் தற்போது இந்தியா 58.93 சதவீத வெற்றியுடன் 2வது இடத்தில் உள்ளது.

டெஸ்ட் தொடரை 3-1 அல்லது  3-0 என கைப்பற்றினால் இறுதி போட்டிக்குள் நுழையலாம். ஆஸ்திரேலியா 75.56 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் ஒரு டெஸ்ட்டை டிரா செய்தாலே அந்த இடத்தை உறுதி செய்யும்.

நேருக்கு நேர்..

இரு அணிகளும் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 43ல் ஆஸ்திரேலியா, 30ல் இந்தியா வென்றுள்ளது. ஒரு போட்டி டையிலும் 28 டெஸ்ட் டிராவிலும் முடிந்துள்ளன. இந்தியாவில் ஒன்று, ஆஸ்திரேலியாவில் 2 என கடைசியாக மோதிய 3 டெஸ்ட் தொடரையும்  இந்தியாவே கைப்பற்றி உள்ளது.

இரு அணிகளும் 1947ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் இதுவரை 27 முறை டெஸ்ட்தொடர்களில் ஆடி உள்ளன. இதில் ஆஸ்திரேலியா 12 , இந்தியா 10முறை தொடரை கைப்பற்றி உள்ளன. 5 தொடர் சமனில் முடிந்துள்ளது.

இந்தியா- ஆஸி. டெஸ்ட் வரலாற்றில் இதுவரை

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் சிட்னியில் 2004ல் அடித்த 705/7(டிக்) ஆகும். ஆஸ்திரேலியா அடிலெய்ட்டில் 674 ரன் எடுத்தது தான்  அதிகபட்ச ரன்.

* குறைந்த பட்சமாக இந்தியா அடிலெய்ட்டில் 2020ல் 36 ரன்னிலும், ஆஸி. மெல்போர்னில் 1981ல் 83 ரன்னிலும் சுண்டுள்ளது.

* ஆஸி.க்கு எதிராக சச்சின் 39 டெஸ்ட்டில் ஆடி 11 சதம், 16 அரைசதத்துடன் 3630ரன் குவித்துள்ளார். ஆஸி. தரப்பில் ரிக்கிபாண்டிங் 29 போட்டியில் 8 சதம், 12 அரைசதத்துடன் 2555 ரன் அடித்துள்ளார்.

* ஒரு இன்னிங்சில் மைக்கேல் கிளார்க்  329, லட்சுமணன் 281 ரன் விளாசியது தான் தனிநபர் பெஸ்ட் ஸ்கோராக உள்ளது.

* பவுலிங்கில் அனில் கும்ப்ளே 20 டெஸ்ட்டில் 111 விக்கெட்டும், ஆஸி. தரப்பில் நதன் லயன் 22 போட்டியில், 94 விக்கெட்டும் எடுத்து டாப்பில் உள்ளனர். ஹர்பஜன் 95அஸ்வின் 89 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

* இரு தரப்பு தொடரில் சச்சின் 11, ஸ்மித், கவாஸ்கர், பாண்டிங் தலா 8 சதம் அடித்துள்ளனர்.கோஹ்லி, கிளார்க் 7 சதத்துடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Stories: