ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி

ஐதராபாத்: ரூ. 38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் நவீன் ரெட்டி என்பவரை ஐதராபாத் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தெலுங்கு திரைப்பட நடிகர் நவீன் ரெட்டி அட்லூரி (34), தனது நண்பரான கட்டா சரின் ரெட்டிக்கு சொந்தமான சொத்துகளை அபகரித்ததாகவும், ரூ.38 கோடி அளவிற்கு ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. கட்டா சரின் ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன் நவீன் ரெட்டி அட்லூரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நடிகர் நவீன் ரெட்டி, அவரது தொழில்முறை கூட்டாளியான கட்டா சரின் ரெட்டியின் கையொப்பத்தை போலியாக போட்டு 7.3 ஏக்கர்  நிலத்தை அபகரித்துள்ளார். அந்த நிலத்தை அவரது நண்பர் கல்யாண் ரெட்டிக்கு  கடந்தாண்டு எழுதிக் கொடுத்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கல்யாண்  ரெட்டி அந்த நிலத்தை நவீனின் தந்தை மாமா உபேந்தர் ரெட்டிக்கு மாற்றினார்.  மேலும் ரூ.6 கோடி மதிப்பிலான நிலத்தை சரின் ரெட்டிக்கு தெரியாமல்  மாற்றியுள்ளார். திரைத்துறையிலும் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இதுகுறித்து சரின் ரெட்டி, நவீனை தட்டி கேட்ட போது,  அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.38 கோடி அளவிற்கு  மோசடி செய்த நவீன் ரெட்டி மீது ஐபிசி 420, 465, 468  மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நவீன் ரெட்டி கைது செய்யப்பட்டார்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: