×

ஜிஎஸ்டி வரி, கெடுபிடியால் விவசாயிகள் அதிருப்தி காளிப்பட்டி மாட்டுச்சந்தை வெறிச்சோடியது-வியாபாரிகள் ஏமாற்றம்

மல்லசமுத்திரம் : ஜிஎஸ்டி வரி மற்றும் போலீசார் கெடுபிடி காரணமாக விவசாயிகள் வராததால், காளிப்பட்டியில் மாட்டுச்சந்தை வெறிச்சோடியது. மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச தேர்திருவிழா நடந்து வருகிறது. 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

திருவிழாவின் ஒரு பகுதியாக மாட்டு சந்தை பாரம்பரியமாக 7 நாட்கள் நடைபெறும். இந்த சந்தையில் மாடுகள் மட்டுமின்றி, மாடுகளுக்கு தேவையான மூக்கனாங்கயிறு, சாட்டை, மாட்டு வண்டி உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுகிறது. சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாட்டு ரக பாரம்பரிய இன காளைகள் மற்றும் கறவை மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். காளிப்பட்டி, மல்லசமுத்திரம், சேலம், ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டும் திருவிழாவை ஒட்டி வழக்கம்போல் மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் மாடுகளை கொண்டு வராததாலும், எதிர்பார்த்த அளவிற்கு மாடுகளை வாங்க விவசாயிகள் வராததாலும் சந்தை வெறிச்சோடி இருந்தது. மேலும் சந்தையில் மூக்கனாங்கயிறு உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய கடை அமைத்திருந்த வியாபாரிகளும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து வைகுந்தம் எளையாம்பாளையத்தை சேர்ந்த தமிழரசன், விவசாயி பூபதி ஆகியோர் கூறியதாவது:

சந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மாடுகளை வாங்க இங்கு வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் போதிய அளவிற்கு வரவில்லை.
இதனால் எதிர்பார்த்த வியாபாரம் நடக்கவில்லை. மாடுகளுக்கு ஏற்பட்டு வரும் மர்ம நோய் காரணமாகவும், பாலுக்கு உரிய விலை கிடைக்காததாலும் மாடுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் மாடு விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவதாலும், வழியில் வணிக வரித்துறையினர் மற்றும் போலீசாரின் கெடுபிடி அதிகம் இருப்பதாலும் வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டுவரவில்லை.

சந்தையில் சந்தனப்பிள்ளை, மயிலை, நாட்டுக்குட்டை, தெக்கத்தி மாடு, கோரப்பட்டு செவலை, கருக்கா மயிலை, காங்கேயம் மயிலக்காளை, காராம் பசு, ஆலம்பாடி, வடக்கத்தி மாடுகள் விற்பனைக்கு வந்தது. காராம் பசு வகை மயிலைக்காளை ₹3 லட்சத்திற்கும் விலை வைக்கப்பட்டது. பவானி மயிலம்பாடி பகுதியில் இருந்து காங்கேயம் காளைகள் மற்றும் பசுக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு காளைகள் ஜோடி ₹1.50 லட்சமும், பசு மற்றும் கன்றுக்கு ₹75 ஆயிரமும் விலை வைக்கப்பட்டது.

மாட்டின் பல் மற்றும் சுழி, தரம் ஆகியவைகளை வைத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. 4 நாட்கள் தொடர்ந்து சந்தை நடக்கும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் வண்டி மாடுகளின் வரத்து குறைவாக இருந்த நிலையில், கன்றுகளின் விற்பனை கணிசமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Mallasamutram: Due to GST tax and police brutality, the cattle market was deserted in Kalipatty as the farmers did not come.
× RELATED மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு...