தேவர் சோலை பேரூராட்சியில் நீரோடை குறுக்கே பாலம் அமைக்க 2 அரசு துறைகளில் நிதி ஒதுக்கீடு

*பெண் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்-பரபரப்பு

கூடலூர் : தேவர் சோலை பேரூராட்சியில் நீரோடை குறுக்கே பாலம் அமைக்க 2 அரசு துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், இப்பிரச்னை தொடர்பாக திமுக, அதிமுக பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு சேப்பட்டி பழங்குடியினர் கிராமத்தை ஒட்டி ஓடும் பாண்டி ஆற்றின் கிளை ஆற்றில் ஏற்கனவே இருந்த சிறிய பாலம் பழுதடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆற்றின் ஒரு கரைப்பகுதி கூடலூர் நகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகவும் மறுகரை தேவர் சோலை பேரூராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகவும் உள்ளது.

இதைத்தொடர்ந்து, 18வது வார்டு உறுப்பினர் முயற்சியால் இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தை இடித்துவிட்டு 17 மீட்டர் நீலத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு எஸ்ஏடிபி திட்டத்தின் கீழ் நீர்வளத்துறை சார்பில் 19.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் கூடலூர் நகராட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 10 மீட்டர் நீளத்தில் பாலம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் 2 வார்டு கவுன்சிலர்கள் இடையே இப்பிரச்னை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, தங்களின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் நீர்வளத்துறை சார்பில் இப்பகுதியில் 17 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கவும், இங்குள்ள பழங்குடியின கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கரையை ஒட்டி தடுப்புந்சுவர் மற்றும் படித்துறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், நீர்வளத்துறை மூலமாகவே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்பிரச்சினை குறித்து ஆர்டிஓவிடம் முறையிட போவதாகவும் தேவர்சோலை பேரூராட்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் சாய்பிரியா தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், சேப்பட்டி கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் கூடலூருக்கு வர வேண்டி உள்ளது. கடந்த மழை காலத்தில் இங்குள்ள ஒரு பழங்குடியின பெண்ணின் பிரசவத்திற்காக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதிலிருந்து பணியாளர்கள் வீட்டுக்கு சென்று பிரசவம் பார்த்தனர்.

இதையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பாலம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நகராட்சி சார்பில் இப்போது பணிகள் துவக்கப்பட்ட நிலையில் பிரச்னை எழுந்துள்ளதாக நகராட்சி திமுக கவுன்சிலர் சகுந்தலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரே இடத்தில் பாலம் அமைக்க இரு அரசு துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பாலம் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் உயரதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பாலத்தின் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: