×

ஊட்டி அருகே அவலாஞ்சியில் ரூ.2.50 கோடியில் டிரவுட் மீன்குஞ்சு பொரிப்பகம், பண்ணை நவீன மயம்-20 ஆயிரம் முட்டைகள் கொள்முதல்: கலெக்டர் தகவல்

ஊட்டி : அவலாஞ்சியில் ரூ.2.50 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்படும் அவலாஞ்சி டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் பண்ணையை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே அவலாஞ்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 கோடியில் டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் பண்ணை நவீன மயமாக்கப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மீன் வளர்ப்பு முறை குறித்து கேட்டறிந்து அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கேற்ப தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் டிரவுட் மீன்குஞ்சுகளை இருப்பு வைத்து வளர்த்தெடுக்க 1863ம் ஆண்டு பிரான்சிஸ் என்ற மீன்வள ஆராய்ச்சியாளரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 1907 ஆம் ஆண்டு ஹென்றி சார்ல்டன் வில்சன் என்ற ஆங்கிலேய மீன்வள ஆராய்ச்சியாளரால் டிரவுட் மீன்குஞ்சு பொறிப்பகம் மற்றும் வளர்ப்பு பண்ணை தொடங்கப்பட்டது. இப்பண்ணை கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 2,036 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இப்பண்ணையில் டிரவுட் மீன்களிலிருந்து முட்டைகளை எடுத்தல், அம்முட்டைகளிலிருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்தல், மீன் குஞ்சுகளை வளர்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆண்டுக்கு தோராயமாக 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்த்தெடுக்கப்படும். கடந்த 2019ம் ஆண்டு பெய்த கனமழை, வெள்ள பெருக்கினால் அவலாஞ்சி டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம் சேதமடைந்தது.

இதையடுத்து தேசிய வேளாண் அபிவிருத்தி - ஆர்கேவிஒய் திட்டத்தின் கீழ் நீர்வழிப்பாதை பழுது பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கோக்கர்நாக் அரசு டிரவுட் மீன் பண்ணையிலிருந்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் டிரவுட் மீன்குஞ்சு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் இணைப்பு பாலம் ரூ.17.22 லட்சம் மதிப்பிலும், செக்டேம் ரூ.32.04 லட்சம் மதிப்பிலும், வடிகால் ரூ.43.03 லட்சம் மதிப்பிலும், தடுப்புச்சுவர் ரூ.34.93 லட்சம் மதிப்பிலும், 5 மீன் வளர்ப்பு குளம் ரூ.18.79 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, கலெக்டர் கூறினார். அப்போது மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், பவானிசாகர் உதவி இயக்குநர் கதிரேசன், குந்தா வட்டாட்சியர் இந்திரா உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : Farm Naveen Mayam ,Avalanchi ,Ooty , Ooty : Avalanchi trout hatchery and farm to be modernized at a cost of Rs 2.50 crore by Collector Amrit
× RELATED தொட்டபெட்டா செல்ல திடீர் தடை; சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம்