×

இரட்டை இலை கிடைத்தால் வென்றுவிடுவார்களா?: ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை.. டிடிவி தினகரன் பேட்டி..!!

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், என்னிடம் யாரும் பேசி அமமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை.  விக்கிரவாண்டி , நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது போல ஈரோடு கிழக்கு தொகுதியையும் புறக்கணத்துள்ளோம். சுயேட்சை சின்னத்தில் போட்டியிடலாமா? அல்லது குக்கர் சின்னத்திற்காக உச்ச நீதிமன்றத்தை நாடலாமா என யோசித்தேன், நிர்வாகிகள் வேண்டாம் என கூறி விட்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அமமுக தொண்டர்களுக்கு தெரியும் என்றார்.

குக்கர் சின்னம் இல்லாததால் போட்டியில்லை:


அமமுக போட்டியிடாததற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்; எந்த அரசியல் காரணமும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்காததால் போட்டியில்லை. குக்கர் சின்னம் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே போட்டியில்லை என தெரிவித்தார்.

இரட்டை இலை கிடைத்தால் வென்றுவிடுவார்களா?

இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் வென்றுவிடுவார்களா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சியின் தொண்டர்களுக்கே இல்லை. இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் உள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் பழனிசாமி தரப்பு வெற்றி பெறாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என்று கூறினார்.

பாஜகவிடம் இருந்து அழைப்பும் வரவில்லை:

பாஜகவிடம் இருந்து இடைத்தேர்தல் தொடர்பாக எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. நாங்கள் எந்த அணியிலும் இல்லை, தனித்தே இருக்கிறோம், நாடாளுமன்ற தேர்தலில் புதுக் கூட்டணி உருவாக்குவது பற்றி யோசிப்போம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Tags : Erode ,DTV ,Dhinakaran , Erode by-election, no support, DTV Dhinakaran interview
× RELATED மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும்...