×

சட்டவிரோதமாக மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் குழாய் இணைப்பு ரூ.5.98 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீர் குழாய்கள் இணைத்தவர்களுக்கு ரூ.5,98,500  அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.

எனவே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஜன.13ம் தேதி முதல் கடந்த 3ம் தேதி வரை சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,98,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும்.  மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chennai Municipal Corporation , Rainwater Drainage, Sewerage Pipeline, Connection, Penalty, Chennai Corporation, Action
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்