சென்னை: கவர்னர் மாளிகை ஊடகப்பிரிவு ஆலோசகர் தாக்கியதாக போலீசில் கார் டிரைவர் புகார் அளித்துள்ளார். திண்டிவனத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (25), பிபிஏ பட்டதாரி. இவர், தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். திருநாவுக்கரசு, நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து, முகலிவாக்கத்துக்கு செல்ல ஒரு பயணியை காரில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, பயணி காரை நிறுத்தச்சொல்லி, கீழே இறங்கி செல்வதும் தாமதமாக வருவதுமாக இருந்துள்ளார். நந்தம்பாக்கம் வந்ததும், ஒரு உணவகத்தில் காரை நிறுத்த சொல்லி இருக்கிறார். ஆனால், ஓட்டுநர் திருநாவுக்கரசுவோ குறித்தநேரத்தில் டிரிப்பை முடிக்க வேண்டும்.
ஆகவே, நிறுத்த முடியாது என மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பயணி, ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. உடனே, திருநாவுக்கரசு தனது செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த நந்தம்பாக்கம் காவல்நிலைய ரோந்து போலீசார், 2 பேரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், காரில் பயணியாக வந்தவர் ஆளுநர் அலுவலக ஊடக பிரிவு ஆலோசகர் திருஞானசம்மந்தம் (40) என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும் திருஞானசம்மந்தம், கார் டிரைவரை தாக்கவில்லை என்றும் அவர்தான் காரில் ஏறியதில் இருந்து தன்னிடம் தகராறு செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஓட்டுநர் திருநாவுக்கரசு, காரில் வந்தவர் தன்னை தாக்கியது உண்மை. அவர் தாக்க வரும்போது நான் செல்போனில் பதிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து கார் ஓட்டுநர் திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில், திருஞானசம்மந்தம் மீது போலீசார் சிஎஸ்ஆர் பதிவுசெய்து அனுப்பி வைத்தனர். கால்டாக்சி ஓட்டுநர் திருநாவுக்கரசை அனுப்பாமல் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். ஓட்டுநர் திருநாவுக்கரசு நேற்று கூறும்போது, நேற்று முன்தினம் இரவு முதல் தன்னை காவல் நிலையத்தில் காத்திருக்க வைத்திருந்ததனர். ஆனால், தன்னை தாக்கியவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அவரை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை. அந்த நபர் தாக்கும் வீடியோ உள்ள செல்போனை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டு தரமறுத்து விட்டனர் என குற்றம் சாட்டினார்.
