கோவை: ஆன்மிக, புராதான சின்னங்களை காக்கும் அரசாக திமுக செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் பழனி, திருச்செந்தூர் உள்பட 5 திருக்கோயில்களில் உள்ள அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் 84 பேருக்கு பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளாரால் சிவதீட்சை வழங்கும் விழா நேற்று நடந்தது. இவ்விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமை வகித்தார். இதில், பேரூர் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மாணவர்களுக்கு சிவதீட்சை வழங்கினார். அவர்களுக்கு சிவதீட்சை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: இந்த அரசு ஆன்மிகம் காப்பாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. சொல்லும் திட்டங்களை செயல்படுத்தும் அரசாக திமுகவை தமிழக முதல்வர் வழிநடத்தி வருகிறார். எல்லா வகையிலும் ஆன்மிகத்தில் கடந்த காலத்தில் இருந்த ஓட்டைகள் அனைத்தையும் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். 1,500 திருக்கோயில்களில் ரூபாய் ஆயிரம் கோடியில் திருப்பணி நடந்து வருகிறது.
முன்னோர் விட்டுச்சென்ற சொத்தான ஆன்மிக ரீதியான புராதான சின்னங்கள் காக்க வேண்டும். மன்னர்கள் விட்டுச்சென்ற சொத்து மற்றும் புராதன சின்னங்கள் காக்கும் அரசாக உள்ளது. இந்த அரசை தமிழக முதல்வர் ஒரு ஆன்மிக அரசாக மாற்றி கொண்டு வருகிறார். இறைப்பணி உள்ள குறைகளைக் ஆதீனங்கள் சுட்டி காட்டி வருகின்றனர். அந்த குறைகளைக் நாங்கள் நீக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
* வானதி சீனிவாசன் விஷம செய்தியை பரப்புகிறார்
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘பழனி கோயில் கர்ப்பகிரகத்தில் நான் அத்துமீறி நுழைந்ததாக வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டியது வருத்தம் அளிக்கிறது. ஊடகங்களில் ஏதாவது வரவேண்டும் என்பதற்காக இது போன்ற விஷம செய்தியை பரப்புவதை வானதி சீனிவாசன் வாடிக்கையாக கொண்டுள்ளனர். வெளிநாட்டினர் கூட பழனியில் நடந்த கும்பாபிஷேகம்போல் வேறு எங்கும் நடக்கவில்லை என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த மகிழ்ச்சியில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை பரப்பி கொண்டிருக்கிறார்’ என்றார்.