இந்தியர்களின் புற்றுநோய்...

நன்றி குங்குமம் டாக்டர்

உலகளவில் மிகப் பொதுவாக பாதிக்கிற புற்றுநோய்களுக்கான தரவரிசையில் ஆறாவது இடத்தில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் இச்சூழ்நிலை உலக நியதியிலிருந்து மாறுபட்டிருக்கிறது. இந்தியாவில் ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து புற்றுநோய்களுள் ஏறக்குறைய 30-40% தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களாகவே இருக்கின்றன. உலகளவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதிப்பு நபர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமாக இந்தியாவில் இருப்பதால் இப்புற்றுநோய் இந்திய புற்றுநோய் என்றே அழைக்கப்படுகிறது.

தலை கழுத்து புற்றுநோய் ஏற்படுவதற்கான மிகப் பொதுவான நோய் காரணி அம்சங்களாக புகையிலை (புகைப்பிடித்தல் மற்றும் புகைத்தல் இல்லாத உட்கொள்ளல்) மற்றும் ஆல்கஹால் (மது) ஆகியவையே இருக்கின்றன. புகைத்தல் இல்லாமல் புகையிலை குட்கா, பான் (வெற்றிலை) போன்றவையே இந்தியாவிலும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் இந்நோய்க்கான பிரதான காரணிகளாக இருக்கின்றன. பாக்கை (கொட்டைப் பாக்கை உள்ளடக்கிய) மெல்கிற வழக்கம், வாய்க்குள் இழைநார் வளர்ச்சியை உருவாக்குகிறது.

 இதுவே பிறகு வாய் புற்றுநோயாக மாறுகிறது. கொட்டைப் பாக்கு என்பது உலக சுகாதார நிறுவனத்தால் புற்றுநோய் காரணி என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. புகையிலையையும், பாக்கையும் சேர்த்து உட்கொள்ளும்போது அவைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதனை பயன்படுத்தும் நபரின் புற்றுநோய் இடர்வாய்ப்பை 8 - 10 தடவை அதிகரிக்கின்றன. புற்றுநோயை ஏற்படுத்துகின்ற இந்த காரணிகள் நமது இந்திய மக்கள் மத்தியில் காணப்படும் வாய் புற்றுநோயில் 90%-க்கும் மற்றும் குரல்வளை தொற்றுநோயில் 80%-க்கும் பங்களிப்பை செய்கின்றன.

புற்றுநோயை ஏற்படுத்தும் இந்த பழக்கவழக்கங்களை நிறுத்திவிடுகிறபோது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது (இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு வழக்கமாக 10 - 15 ஆண்டுகள் எடுக்கும்). மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்கள் தொகையில் HPV (தவறான பாலியல் பழக்கவழக்கங்களால் பரவுகிற) வாயோடு கூடிய தொண்டை பகுதி மற்றும் வாயில் ஏற்படுகிற புற்றுநோய்களுக்கு பிரதான காரணமாக இருக்கிறது. இந்தியாவிலும்கூட இவ்வாறு பரவுகிற புற்றுநோய் மெதுவாக ஆனால், நிலையாக வளர்ந்து வருவது காணப்படுகிறது.

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களின் அறிகுறிகள்

3 வாரங்களுக்குள் குணமடையாத வாய்ப்புண், குரலில் மாற்றம் மென்மையற்ற / கரகரப்பான குரல், விழுங்குவதில் சிரமம், கழுத்து வீக்கம், வாயில் அசாதாரண ரத்தக்கசிவு வலி அல்லது மரத்துப்போன உணர்வு, வாயைத் திறப்பதில் சிரமம், முகத்தில், கழுத்தில் அல்லது காதில் தொடர்ந்து இருக்கும் வலி, பற்கள் தளர்வாகுதல் அல்லது சரியாக பொருந்தாத செயற்கை பற்கள் அமைப்பு, ஆரம்ப நிலைப் புற்றுநோய் - கழுத்தில் நிணநீர் முடிச்சுகள் இல்லாமல் 4 செ.மீ.-க்கும் குறைவான அளவு புற்றுக்கட்டி.

ஆரம்ப நிலை புற்றுநோய்களுக்கு ஒற்றை வழிமுறையில் சிகிச்சையளிக்கப்படுகின்றன - அறுவைசிகிச்சை அல்லது கதிரியியக்க சிகிச்சை. முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. அறுவைசிகிச்சை; அதைத் தொடர்ந்து கீமோதெரபியோடு அல்லது கீமோதெரபி இல்லாமல் கதிரியக்க சிகிச்சை.

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கான சிகிச்சை முறையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. இதில், தலை, கழுத்து புற்றுநோயியல் அறுவைசிகிச்சை மருத்துவர், புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோயியல் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு சிறப்பு வல்லுநர்கள் ஆகியோர் சிகிச்சைக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

 இத்தகைய புற்றுநோய்கள் வழக்கமாக சுவாசித்தலையும், விழுங்குதலையும் மற்றும் பேச்சையும் பாதிக்கின்றன. நோயாளியை குணப்படுத்துவதும் மற்றும் இந்த மிக முக்கிய உடலியக்க செயல்பாடுகளை பாதுகாப்பதும் மற்றும் முந்தைய நிலைக்கு கொண்டுவருவதுமே சிகிச்சையின் நோக்கமாகும். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கையின் சிறந்த தரத்தை உறுதிசெய்ய முக ஒருங்கமைவு மற்றும் மறுசீரமைப்பு ஆகியவையும் முக்கியமானவையாக இருக்கின்றன.

வாய் புற்றுநோய்கள்

*வாய் புற்றுநோய்கள், நாக்கு, வாயின் அடித்தளம், ஈறுகள், கன்னத்தின் உட்புற படலம் ஆகியவற்றில் ஏற்படுகின்றன.

*ஆரம்ப நிலை புற்றுநோய்களுக்கு அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றுதல் மற்றும் கழுத்தை பிளந்து வெட்டுதல் (அடர்த்தியான புற்றுநோய் கட்டிகளில்).

*முற்றிய புற்றுநோய்களுக்கான அறுவைசிகிச்சையில் எலும்பையும், மென்திசுவையும் மற்றும் சருமத்தையும் வெட்டி அகற்றுதல் இடம்பெறுகின்றன. சிக்கலான குறைபாடுகளுக்கு உடனடி மறுசீரமைப்பு சிகிச்சையானது செய்யப்படுகிறது. உடலில் தள்ளியிருக்கிற இடங்களிலிருந்து உகந்த திசுக்களை அவற்றின் இரத்த வழங்கல் அம்சத்தோடு அகற்றி அதை மாற்றி பொருத்துவதன் மூலம் இச்சிகிச்சை செய்யப்படுகிறது. இச்சீரமைப்பு செயல்பாட்டுக்கு நுண் ரத்தநாள செயல் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

கீழ்த்தாடைப் புற்றுநோய்

*கீழ்த்தாடையெலும்புதான் முகத்தின் கீழ்ப்புற பகுதிக்கு வடிவத்தைத் தருகிறது மற்றும் உட்கொள்ளும் உணவுப் பொருட்களை மென்று சுவைப்பதற்கு இது அத்தியாவசியம். இதில், புற்றுநோய் ஊடுருவி பரவுமானால், இந்த எலும்பில் பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்பட வேண்டும், இந்த எலும்பில் மறுசீரமைப்பு செய்யவில்லையெனில், அப்போது உணவை மென்று உண்பது சிரமமாகிவிடும் மற்றும் முகத்தோற்றமும் மாறிவிடும்.

*இப்போதெல்லாம் கீழ்ப்புறத்தாடை (குறிப்பாக அதன் மையப்பகுதி), நுண் ரத்த நாள உத்தியை பயன்படுத்தி காலிலிருந்து எடுக்கப்படும் எலும்பிலிருந்து மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இந்த எலும்பானது, எலும்புத்திசுவுடன் ஒருங்கிணைந்துள்ள பல் பதியங்களோடு சேர்த்து பொருத்தப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளின் முக வடிவமைப்பு தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது மற்றும் நோயாளிகளால் உணவுப்பொருட்களை மென்று சாப்பிட முடியும்.

நாக்கில் புற்றுநோய்

*நமது உடல் உறுப்புகளுள் நாக்கு ஒரு மிக நுட்பமான உறுப்பாகும்; உணவுப்பொருட்களை மெல்வதற்கும், விழுங்குவதற்கும் மற்றும் பேசுவதற்கும் உதவுவது நாக்கு தான். நாக்கில் 30%-க்கும் அதிகமாக வெட்டி எடுப்பதை புற்று பாதிப்பு அவசியமாகுமானால், அப்போது நாக்கு மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. நாக்கின் செயல்பாடுகளில் தடைகள், கட்டுப்பாடுகள் உருவாகாமல் இது தடுக்கிறது.

*புற்றுக்கட்டி பெரிதாக இருக்குமானால், அப்போது முழு நாக்கும் அகற்றப்படுவது தேவைப்படலாம். இப்போது கண்டறியப்பட்டுள்ள மிக நவீன மறுகட்டமைப்பு உத்திகளின் மூலம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள நாக்கைக் கொண்டு நோயாளிகளால் உணவை உட்கொள்ளவும் மற்றும் பேசவும் இயலும்.

கன்னத்தில் புற்றுநோய்

*இந்த புற்றுக்கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுவது முகத்தையே விகாரப்படுத்துகிற குறைபாட்டை உருவாக்கும். நுண் இரத்த நாள திசு மாற்றுகை செயல்பாட்டின் மூலம் இந்த குறைபாடுகளை அகற்றி கன்னத்தில் மறுசீரமைப்பைச் செய்யமுடியும்.

தொண்டைப் புற்றுநோய்கள்

இப்பகுதியில் ஏற்படும் ஆரம்பநிலை புற்றுக்கட்டிகளை லேசரின் மூலம் அகற்றி சிகிச்சையளிக்கப்படுகிறது. டிரான்ஸ்-ஓரல் லேசர் அறுவைசிகிச்சையின் வழியாக குரல்வளையில் உள்ள புற்றுக்கட்டிகளை அதிக துல்லியத்துடனும் மற்றும் வெளிப்புறக் கீறல் இல்லாமலும் அகற்றமுடியும். இந்த அறுவைசிகிச்சை முடிந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே நோயாளிகளால் பணிக்கு திரும்ப இயலும்.

குரல்வளைக்கு வெளிப்புறம் வரை பரவியிருக்கிற முதிர்ச்சியடைந்த புற்றுக்கட்டிகளுக்கு குரல்வளையை அகற்றும் அறுவைசிகிச்சை தேவைப்படும். செயற்கையாக பேசுகிற வால்வை பொருத்துவதன் மூலம் இந்நோயாளிகளுக்கு சிகிச்சையின் மூலம் பேசும் திறன் மீண்டும் வழங்கப்படுகிறது. நீண்ட காலஅளவிற்கு ஒரு சத்தமான மற்றும் பலமான முறையில் பேச இயலும்.

குரல்வளைக்கு பின்புறத்திலுள்ள உணவுக்குழாயிலுள்ள புற்றுக்கட்டிகள் குரல்வளை எலும்பியல் இருக்குமானால் அல்லது கதிரியக்க சிகிச்சைக்குப் பிறகு திரும்பவும் தோன்றுமானால், குரல்வளையையும், அடித்தொண்டையையும் அகற்றுவது அவசியப்படும்;

ஒட்டுமொத்தமாக முழு அடித்தொண்டை பகுதியும் அகற்றப்படுமானால், நுண் ரத்தநாள உத்தியை பயன்படுத்தி, சிறுகுடலின் ஒரு பகுதியைக் கொண்டு உணவுக்குழாயை அறுவைசிகிச்சை நிபுணர்கள் மறுகட்டமைப்பு செய்கின்றனர். வாயோடுகூடிய தொண்டைப் பகுதியில் புற்றுநோய் (வாய்க்குழிக்கு பின்புறத்தில் புற்றுக்கட்டி)

இப்பகுதியில் அறுவைசிகிச்சை என்பது அதிக சிக்கலானது; மிக சிரமமானது; ஆனால், ரோபோட்டிக் அறுவைசிகிச்சை முறையின் மூலம் இந்த சிக்கலான அறுவை சிகிச்சைகளை வாயின் வழியாக செய்ய இயலும். எட்டமுடியாத தூரத்திலுள்ள புற்றுக்கட்டிகளை சென்றடைவதற்கு ரோபோ உதவுகிறது.

ஆரம்பநிலை புற்றுக்கட்டிகள் பாதிப்புள்ள நபர்கள் சிகிச்சைக்குப் பிறகு 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கு 80% வாய்ப்பினையும் மற்றும் முற்றிய நிலையிலான புற்றுக்கட்டி நோயாளிகள் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கு 45% வாய்ப்பினையும் கொண்டிருக்கின்றனர். தலை, கழுத்து புற்றுநோய் நோயாளிகளுக்கு இரண்டாவது புற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால் நீண்டகாலத்திற்கு பின்தொடர் மருத்துவ கவனிப்பு தேவைப்படும்.

- எஸ்.கே.பார்த்தசாரதி

கவனத்தில் கொள்ள வேண்டியவை

*வாய்ப்பகுதியில் ஏற்படும் 90% புற்றுநோய்களை புகையிலை, மதுபானம், வெற்றிலை பாக்கு மற்றும் தவறான பாலியல் பழக்கவழக்கங்களை (வாய்வழிப் புணர்ச்சி) முற்றிலுமாக கைவிடுவதன் மூலம் வராமல் தடுக்க இயலும்.

*இப்பழக்க வழக்கங்களை ஆரம்பத்திலேயே நிறுத்திவிடுவது மிக முக்கியம். ஏனெனில், இவற்றினால் ஏற்படும் இடர் படிப்படியாகவே குறைகிறது மற்றும் 10 - 15 ஆண்டுகளுக்குப் பிறகே இயல்பு நிலையை எட்டுகிறது.

*ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்படும்போது சிகிச்சையில் குணமடையும் விகிதாச்சாரமும் சிறப்பாக இருக்கும்.

*சிறப்பான இயக்க செயல்பாட்டையும் முக வடிவமைப்பையும் கொண்டு மேம்படுத்தப்பட்ட உயிர்பிழைக்கச் செய்வதை அறுவைசிகிச்சை இலக்காகக் கொண்டிருக்கிறது.

*சிகிச்சைக்குப் பிறகு, இரண்டாவது முறையாக புற்றுக்கட்டி உருவாகிறதா என்று கண்காணிக்கவும், கண்டறியவும் குறித்த காலஅளவுகளில் பின்தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.

நலமோடு வாழ...

*அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் அது உங்கள் உடலில் எதிர்மறை வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கும். எனவே, சிறிது நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடப்பது, அலைபேசியில் பேசும்போது எழுந்து நின்று பேசுவது போன்ற சின்னச்சின்ன மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

*மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து அதை பின்பற்றுவதே ஆரோக்கியத்தின் முக்கிய அடையாளம் ஆகும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்யுங்கள். இது மட்டுமே உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறமுடியாது, ஆனால் உங்களின் மனநிலையை மேம்படுத்தும் மற்றும் அது ரத்த அழுத்தத்தைக்கூட குறைக்க வாய்ப்பு இருக்கிறது.

*உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்க குறைந்தபட்சம் ஒருவர் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் தூங்குவது அவசியமாகும். நாள்பட்ட தூக்கமின்மை வளர்சிதை மாற்றத்தில் பல்வேறு விதமான பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.

Related Stories: