பாலக்கோடு வனச்சரகத்தில் பிடிக்கப்பட்ட மக்னா யானை டாப்சிலிப்பில் விடுவிப்பு

ஆனைமலை,: தர்மபுரி அருகே பிடிக்கப்பட்ட மக்னா காட்டு யானை, உலாந்தி வனச்சரகத்தில் விடுவிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஊருக்குள் புகுந்த 40 வயது மக்னா காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. இந்த மக்னா யானை ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிகமுத்தி முகாமில் உள்ள கும்கி யானை சின்னத்தம்பியின் உதவியோடு வனத்துறையினர் நேற்று முன்தினம் காலை பிடித்தனர்.

இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பார்கவ் தேஜா தலைமையில், வனச்சரகர் (பொறுப்பு) புகழேந்தி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் 5 வன கால்நடை மருத்துவ குழு கண்காணிப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு உலாந்தி வனச்சரகம் டாப் சிலிப்க்கு மக்னா காட்டு யானை கொண்டு வரப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் உதவியோடு கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப் சிலிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் மக்னா யானை நேற்று விடப்பட்டது. தொடர்ந்து ஒருவாரம், அந்த யானையை வனத்துறை ஊழியர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: