×

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்-1 லட்சம் பேர் பங்கேற்பு

ஆனைமலை :  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம்  திருவிழாவை  முன்னிட்டு, நேற்று  பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்  செலுத்தினர்.  இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த  ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம்  திருவிழா, கடந்த மாதம் 21ம் தேதி  அமாவாசையன்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன்  துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான  கடந்த 3ம் தேதி நள்ளிரவு மயான பூஜை  நடந்தது. பின் மறுநாள் 4ம் தேதியன்று,  குண்டம் இறங்கும் பக்தர்கள்   காப்புக்கட்டி கொண்டனர்.

 நேற்று  முன்தினம் இரவில், சித்திரத்தேர்  வடம் பிடித்தல் மற்றும் அம்மன் திருவீதி  உலா நிகழ்ச்சி நடந்தது. கோயில்  வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், முக்கிய  வீதிகள் வழியாக,  சேத்துமடைரோட்டில் உள்ள மாசாணியம்மன் கோயிலுக்கு சொந்தமான  மண்டப வளாத்தில்  உள்ள குண்டம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டது.  இரவு சுமார்  10.30 மணியளவில் சுமார் 40அடி நீளம், 12அடி அகலமுடைய  குண்டத்தில் பல டன்  விறகால் பூ(அக்னி) வளர்க்கப்பட்டது.  அதே நேரத்தில்,  கண்கவர்  வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. குண்டம் திருவிழாவை காண   வெளியூர்களில் இருந்து பக்தர்கள் ஆயிரகணக்கானோர் வந்தனர்.  இதையொட்டி  ஆனைமலையில் இருந்து சேத்துமடை வழியாக செல்லும் வாகனங்கள்  மாற்றுப்பாதையில்  விடப்பட்டன.  இதைத்தொடர்ந்து, காப்புகட்டி விரதமிருந்த  பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

காலை  சுமார்  6.30 மணியளவில், விரதமிருந்து காப்புக்கட்டிய பக்தர்கள்  உப்பாற்றில்  நீராடினர். பின் 7 மணியளவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு  அலங்கார பூஜை  நடந்தது. அங்கிருந்து தலைமை முறைதாரர், பூப்பந்துடன் கூடிய  பேழைப்பெட்டியை  தலையில் சுமந்து கொண்டுவர, அருளாளி மற்றும் குண்டம்  இறங்கும் பக்தர்கள்  உடன் நடைபயணமாக குண்டம் நோக்கி வந்தனர்.

 பின்  சுமார் 7.15மணியளவில்  குண்டத்தில், பேழைப்பெட்டியில் இருந்த  பூப்பந்தை  உருட்டி விட்டு அருளாளி  முதலில் குண்டம் இறங்கினார். இதைத்தொடர்ந்து,  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பக்தர்கள் பய பக்தியுடன் ஒவ்வொருவராக குண்டம்  இறங்கி  நேர்த்திகடன் செலுத்தினர். அந்நேரத்தில்,  குண்டத்தின் மேலே  வானில், கருடன்  மூன்று முறை சுற்றி வந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த  பக்தர்கள் ‘‘அம்மா  தாயே, மாசாணி தாயே’’ என்ற பக்தி கோஷம் எழுப்பினர்.

 மேலும், பாதுகாப்பு  பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் வனத்துறையை சேர்ந்த சிலரும் குண்டம்  இறங்கி, வியக்கவைத்தனர்.  ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும்,  பெண்கள் குண்டத்தில் மலர்  தூவியும், வணங்கியும் சென்றனர்.  இந்த குண்டம்  திருவிழா நிகழ்ச்சியில்,  எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமல்கந்தசாமி,  மாநில திமுக தகவல்  தொழில்நுட்ப அணி  துணை தலைவர் டாக்டர் மகேந்திரன், மாநில  பொதுக்குழு  உறுப்பினர் சாந்தலிங்ககுமார், ஆனைமலை பேரூர் கழக செயலாளர்  டாக்டர்  செந்தில்குமார், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைசெல்வி  சாந்தலிங்ககுமார்  மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்  நிர்வாகத்தினர் பலர்  கலந்து கொண்டனர்.

ஆனைமலை  மாசாணியம்மன் கோயில்  குண்டத்திருவிழாவை காண கோவை, திருப்பூர், ஈரோடு,  மதுரை திண்டுக்கல், கரூர்  உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சுமார்  1லட்சத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் வந்திருந்தனர்.   கூட்டத்தை  கட்டுப்படுத்த சுமார் 300க்கும்  மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல்  படையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.
மேலும்,  குண்டம் பகுதியில் நடக்கும் செயல்பாடுகள்  குறித்து கண்காணிக்கவும்.

அசம்பாவிதத்தை தடுக்கவும், போலீஸ் சார்பில்  10 இடங்களில் சிசிடிவி கேமரா   வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதையடுத்து  இன்று (7ம் தேதி) காலை 9  மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி  பூஜையும், நாளை 8ம்  தேதி பகல் 12 மணியளவில் மாசாணியம்மனுக்கு மகா அபிஷேக  அலங்கார பூஜையுடன்  விழா நிறைவடைகிறது என கோயில் நிர்வாகத்தினர்  தெரிவித்தனர்.

Tags : Anaimalai Masaniyamman , Anaimalai: On the occasion of the Anaimalai Masaniyamman Temple Gundam festival next to Pollachi, devotees descended to the Gundam yesterday.
× RELATED தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள்...