×

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு கஞ்சா விற்ற ஒடிசா நபர் கைது -தேனி தனிப்படை போலீசார் அதிரடி

ஆண்டிபட்டி : தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக கஞ்சா கடத்திய ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரை, தேனி மாவட்ட தனிப்படை போலீசார் அவரது சொந்த ஊரில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.தேனி - மதுரை மாவட்ட எல்லையான, ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் போலீஸ் சோதனை சாவடியில், கடந்த ஜன.16ம் தேதி கருவாடு ஏற்றி வந்த லாரியில் இருந்து 1,200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைதாயினர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தலின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

இதற்காக இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படையினர் கஞ்சா கடத்தல் குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒடிசா மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படையினர் ஒடிசா விரைந்தனர்.
அம்மாநில போலீசார் உதவியுடன், ஒடிசா மாநிலம், துப்புலவாடா பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணகாந்த பல்லாவ்(52) என்பவரை கைது செய்தனர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு, கஞ்சா கடத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது.

ஆண்டிபட்டிக்கு அழைத்து வரப்பட்ட கிருஷ்ணகாந்த பல்லாவ்விடம், எஸ்பி  பிரவீன் உமேஷ் டோங்ரே விசாரணை நடத்தினார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்களிடம் எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே கூறும்போது, ‘‘மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 40 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளன. கஞ்சா கடத்தலை தடுக்க, தொடர்ச்சியாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.



Tags : Odisha ,Tamil Nadu , Andipatti: Theni District Special Police Force, who smuggled ganja continuously to 4 states including Tamil Nadu, joined Odisha state.
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை