×

காளையார்கோவிலில் யானை மேல் அமர்ந்து செல்லும் மன்னனின் அரிய சிற்பம் கண்டெடுப்பு-15ம் நூற்றாண்டை சேர்ந்தது

காளையார்கோவில் : காளையார்கோவிலில் யானை மேல் மன்னர் அமர்ந்து செல்லும் அரிய வகை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா தலைமையிலான குழுவினர், காளையார்கோவில் வாள் மேல் நடந்த அம்மன் கோயில் பகுதியில் கள ஆய்வு செய்தனர். இதில் செயலர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன், ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆய்வில் யானை மேல் மன்னர் உலா வரும் 15ம் நூற்றாண்டு சிற்பத்தை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறுகையில், ‘‘காளையார்கோவிலில் வாள் மேல் நடந்த அம்மன் கோயில் முன் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கிழக்கு பகுதியில் பழமையான கற்தூண்களும், சிற்பங்களும் இரண்டு இடங்களில் குவியலாக கிடக்கின்றன. குவியலாக கிடக்கும் கற்களை விட்டு அவற்றிலிருந்து தனியாக கிடக்கும் கல்லில் மன்னன் ஒருவன் யானையின் கழுத்தில் அமர்ந்து செல்வதும், மன்னனுக்கு பின் பணியாளர் ஒருவர் அமர்ந்து வெண்கொற்றக்குடை பிடித்துச் செல்வதும், பெண்கள் வெண்சாமரம் வீசுவதுமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சிற்பம் 15ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். பொதுவாக மன்னரோ தெய்வமோ உலா வரும்பொழுது மாட மாளிகையில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் எழுவகை மகளிர் காதல் கொள்வதாக இலக்கியங்களில் வர்ணிக்கப்படும். இச்செய்தி இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கருங்கற்கள் எனப்படும் வெள்ளை கற்கள் குறைவாகவும் செம்பூரான் கற்கள் அதிகமாகவும் கிடைக்கப் பெறுகின்றன. செம்பூரான் கற்களை வட்டமாக வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, மேல் சுண்ணாம்பு பூசியும் பூசாமலும் தூண்களாக பயன்படுத்தி உள்ளனர்.

வாள்மேல் நடந்த அம்மன் கோயிலோடு பாண்டிய மன்னர்களின் கதை பொய்ப்பிள்ளைக்கு மெய்ப்பிள்ளை தந்த திருவிழாவாக கொண்டாட பெறுவதால் இக்கோயிலின் பழமையை உணரலாம். இக்கோயிலின் சிதைவுற்ற பழைய கட்டுமானப் பகுதியாகவே இவை இருக்கலாம். யானை மேல் மன்னர் அமர்ந்து செல்லும் அரிய வகை சிற்பம் அரசு அருங்காட்சியகத்தில் தேவஸ்தானம் சமாஸ்தானம் அனுமதியோடு ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

Tags : Kallyargov , Kalayar Temple: A rare sculpture of a king sitting on an elephant has been found in Kalayar Temple.
× RELATED வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா