திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி-அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி உள்பட 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆத்தூர் யூனியன் சித்தரேவு ஊராட்சி செல்லம்பட்டியைச் சேர்ந்த வையாபுரி (70) மனு கொடுக்க வந்தார். மனுவில், நீர்வரத்து ஓடையை நம்பி விவசாயம் செய்து வருவதாகவும், ஓடையை தூர்வாராததால் விவசாயம் பாதிப்படைந்து கஷ்டப்படுவதாகவும் கூறியபடியே, தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

2வது சம்பவம்: இதேபோல் தனக்கு சொந்தமான வீட்டை சிலர் இடித்து ஆக்கிரமித்துள்ளதாக வடமதுரை அருகே உள்ள சித்தூரை சேர்ந்த காளியம்மாள் (50), வடமதுரை போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர்.

3வது சம்பவம்: திண்டுக்கல் மக்கான் தெருவை சேர்ந்தவர் காதர் மைதீன். சுதந்திர போராட்ட தியாகி. இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திண்டுக்கல் அருகே வாழைக்காய்பட்டி பிரிவு பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. காதர் மைதீன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து 2009ம் ஆண்டு பித்தளைபட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், போலி பத்திரம் தயார் செய்து, தியாகி காதர்மைதீனின் ஒரு ஏக்கர் நிலத்தை தனது மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, காதர்மைதீனின் மகன் சையது இப்ராஹிம் (49), இவரது மனைவி ரஷிதா பேகம் (48) ஆகியோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: