×

பிராத்வெய்ட் - சந்தர்பால் ஜோடி சாதனை வெஸ்ட் இண்டீஸ் 447/6 டிக்ளேர்

புலவாயோ: ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 447 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. குயின்ஸ் ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 221 ரன் எடுத்திருந்தது. முதல் 2 நாட்களும் கனமழை காரணமாக ஆட்டம் தடைப்பட்ட நிலையில் 89 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேப்டன் பிராத்வெய்ட் 116 ரன், தேஜ்நரைன் 101 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 336 ரன் சேர்த்து, கார்டன் கிரீனிட்ஜ் - டெஸ்மாண்ட் ஹேய்ன்ஸ் படைத்த முந்தைய சாதனையை (1990ல் இங்கிலாந்துக்கு எதிராக 298 ரன்) முறியடித்தது. பிராத்வெய்ட் 182 ரன் (312 பந்து, 18 பவுண்டரி) விளாசி வெளியேறினார்.

அடுத்து வந்த மேயர்ஸ் 20 ரன் எடுக்க, ரீபர் 2, பிளேக்வுட் 5, சேஸ் 7, ஹோல்டர் 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 447 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சந்தர்பால் 207 ரன் (467 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோஷுவா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் பிராண்டன் மவுடா 5, மசகட்சா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்துள்ளது. மகோனி 33, சிபாபா 9, கிரெய்க் எர்வின் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இன்னொசென்ட் கயா 59 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Brathwaite ,Chanderpal ,West , Brathwaite-Chanderpal record West Indies declare 447/6
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை