சென்னை: சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் இடையே உள்ள பாலத்தின் மீது நேற்று மாலை வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். குடிபோதையில் இருந்த அவர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வெகு நேரம் மிரட்டல் விடுத்தபடி இருந்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் ‘போதை வாலிபர் ஆற்றில் விழுவானா... என்று’ வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் சம்பவம் குறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதை பார்த்த அந்த வாலிபர் திடீரென கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் கூவம் ஆறு தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி இருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனாலும், போதை வாலிபர் கூவம் ஆற்றின் தண்ணீரில் இருந்து வெளியே வராமல் அங்கும் இங்கும் நீந்தியபடி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார், போதை வாலிபரை மீட்க தீயணைப்பு வீரர்களின் உதவியை நாடினார். வீரர்கள் வந்து தண்ணீருக்குள் இறங்கியதும், அவர் தண்ணீரிலேயே நீந்தியபடி மீண்டும் போக்கு காட்டினார்.
பிறகு 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போதை வாலிபரை பத்திரமாக மீட்டனர். பிறகு அவரிடம் விசாரணை நடத்தியதில் வேலன் (25) என்பது தெரிய வந்தது. இது போல இவர் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. போலீசார் போதை வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். போதை வாலிபரின் நடவடிக்கையால் சிறிது நேரம் எழும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.