மனைவியை அபகரித்ததால் பிரபல ரவுடியை கொல்ல முயற்சி: மற்றொரு ரவுடி வெறியாட்டம்; கேளம்பாக்கம் அருகே பரபரப்பு

சென்னை: கேளம்பாக்கம் அருகே, தனது மனைவியை அபகரித்த பிரபல ரவுடியை கொல்ல முயற்சி செய்த, மற்றொரு ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கண்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாய் சேகர் (எ) தனசேகர் (36). இவர் மீது திருப்போரூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் மேடவாக்கத்தை அடுத்த பொன்மாரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு இருந்தபோது, அங்கு திடீரென 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தனசேகரை சரமாரியாக வெட்டியது.

இதில், பலத்த காயமடைந்த தனசேகர் தப்பி ஓட முடியாமல் கீழே விழுந்தார். அப்போது, அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த அந்த கும்பல் பைக்கில் தப்பி ஓடிவிட்டது. உடனடியாக இதுகுறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த தனசேகரை மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, தனசேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கண்ணகி நகரை சேர்ந்த பிரபல ரவுடி கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தியின் மனைவியை, தனசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தி வந்து 2வது திருமணம் செய்துக்கொண்டு, தனி வீடு எடுத்து தங்கியிருந்ததும், இதனால், தனசேகரை கொல்ல கிருஷ்ணமூர்த்தி திட்டம் தீட்டி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகளை தேடி வருகின்றனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: