×

சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்? போக்குவரத்து துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டரில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளது. அதற்கும் 14 மாதங்கள் ஆகும்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 442 தாழ்தள பேருந்துகளும் மூன்று மாதங்களில் இயக்கப்படும். 100 மின்சார தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும். எந்தெந்த சாலைகளில் இயக்க முடியாது என்பது குறித்த அறிக்கையை தமிழ்நாடு போக்குவரத்து துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Chennai ,Transport Department , Which roads in Chennai can ply low floor buses? Court order to respond to Transport Department
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்