×

புஞ்சை புளியம்பட்டி அருகே பொன்மலை ஆண்டவர் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சத்தியமங்கலம் :  புஞ்சை புளியம்பட்டி அருகே கொண்டையம்பாளையத்தில் பழமை வாய்ந்த பொன்மலை ஆண்டவர்  கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக நடக்கிறது. இக்கோவிலில் பிரம்மாண்ட தேர் மற்றும் சிறிய தேர் என இரண்டு தேர்கள் வடிவமைக்கப்பட்டு சிவன், சக்தி, முருகன் தெய்வங்களின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து  மூலவருக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி-தெய்வானையுடன்  முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட  திருத்தேருக்கு எழுந்தருளினார். நேற்று மதியம் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் துவங்கியது. முதலில் சிறிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பெரிய தேர் இழுக்கப்பட்டது.

இரண்டு தேர்களில் வள்ளி-தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் மற்றும் விநாயகர், ஈஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கொண்டையம்பாளையம் நான்கு ரத வீதிகளில் தேர் சென்றது. வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். தைப்பூச விழாவையொட்டி பொன்மலை ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தைப்பூச விழா தேரோட்ட நிகழ்ச்சியில் ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாத யாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி புஞ்சை புளியம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுப்பீர்கடவு செம்மலை ஆண்டவர்:இதேபோன்று சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் அடர்ந்த  வனப்பகுதியில் செம்மலை ஆண்டவர் கோயில் விழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதைத்தொடர்ந்து சாமி அழைத்தல், திருவிளக்கு பூஜை, தேர் காவடி எடுத்தல்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புதுப்பீர்கடவு  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து  மாலை அணிந்து காவடி எடுத்தபடி செம்மலை ஆண்டவர் கோவிலுக்கு சென்று  நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று தைப்பூசத்தை ஒட்டி செம்மலை ஆண்டவர்  கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள  மாதேஸ்வரன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அந்தியூரில் 500 பால்குட ஊர்வலம்அந்தியூர்  சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி 500க்கும் மேற்பட்ட பால்குட  ஊர்வலம் நடந்தது. பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட  பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.  சுப்பிரமணியசுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags : Ponmalai Andavar temple ,Punchai Puliyampatti , Sathyamangalam: Annually at the ancient Ponmalai Lord Temple at Kondayampalayam near Puliyampatti, Punchai.
× RELATED ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து