டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா நீதிபதிகளாக பதவியேற்றனர். 5 நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகளுடன் செயல்பட வேண்டிய, உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு 27 நீதிபதிகள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதால், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஸானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் கொடுத்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர்.
இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும். உச்சநீதிமன்றத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகளில் மூவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாவார். மீதமுள்ள இருவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாவார்கள். அதேசமயம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது ஒன்றிய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.