×

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இதுவரை 83% நிலம் கையகப்படுத்தப்பட்டது: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இதுவரை 83% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் என சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இத்திட்ட விரிவாக்க பணிக்கு ரூ.2,900 கோடி கடன் உதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஒன்றிய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரஜித் குமார் மிஸ்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி நிலயா மிட்டாஷா அண்மையில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடன் தொகையை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடம் மற்றும் மாதவரம், சிறுசேரி, சிப்காட் வரையிலான 5-வது வழித்தடத்தில் செலவிட உள்ளதாக சென்னை மெட்ரோ திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 112.72 ஹெக்டேர் நிலம் தேவை உள்ள நிலையில், 93 ஹெக்டேர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  


Tags : Metro Rail Corporation , Metro, Rail, Project, Land, Company, Information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்