×

டெல்டாவில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் உளுந்து உள்ளிட்ட ஊடுபயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கியுள்ளது விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி, நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகளும் உரிய பாதுக்காப்புகள் இல்லாததால் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. வங்கி கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தாமதமின்றி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vijayakanth ,delta , Vijayakanth insists on relief for rain-damaged rice crops in the delta
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...