வியாசர்பாடியில் குற்றச் சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் குறைகளை கேட்ட வடக்கு மண்டல இணை ஆணையர்

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் தெரு, தெருவாக நடந்துசென்ற வடக்கு மண்டல இணை ஆணையர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சென்னையில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பாக, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி சென்னையில் அதிக குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதியாக கருதப்படும் புளியந்தோப்பு சரகத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையில் போலீசார் தெரு, தெருவாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தனர்.

குறிப்பாக, வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சி-கல்யாணபுரம், நேரு நகர், மல்லிப்பூ காலனி, சாமந்திப்பூ காலனி உள்பட பல பகுதிகளில் தெரு, தெருவாக நடந்துசென்று அங்குள்ள மக்கள் மற்றும் இளைஞர்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். அப்போது போலீசார், இளைஞர்களிடம் என்ன படித்துள்ளீர்கள், சரியான வேலை கிடைத்துள்ளதா போன்ற விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் உங்கள் பகுதியில் போலீசார் இரவு ரோந்து வருகிறார்களா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஏதாவது விற்பனை செய்யப்படுகிறதா என்றும் விசாரித்தனர். இளைஞர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர். இந்த ஆய்வின்போது புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர்கள் வானமாமலை, சதீஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: