சென்னை: வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டதால், பழைய வீட்டின் ஏக்கத்தில் மூதாட்டி ஒருவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (78). இவருக்கு திருமணம் ஆகாததால், தனது தம்பி மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த 27ம் தேதி லட்சுமி வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர், அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து லட்சுமியின் தம்பி மகன்கள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லட்சுமியை தேடி வந்தனர். சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, அவர் கூவம் ஆற்று பாலம் வரையில் நடந்து சென்றது பதிவாகி இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் கூவம் ஆற்றில் பெண் சடலம் மிதந்ததால், அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அந்த பெண் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், அந்த பெண் சடலம், மாயமான லட்சுமி என தெரிந்தது.
மேலும் விசாரணையில், லட்சுமி வாழ்ந்த சொந்த வீட்டில் தான் அவரின் தாய்-தந்தை வாழ்ந்தார்கள் என்பதால், அவர்கள் நினைவாக அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். தற்போது அந்த வீடு இடிக்கப்பட்டு, புதிய வீடு கட்டப்பட்டதால், பழைய வீட்டின் ஏக்கத்திலும், வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவாக இருக்க வேண்டாம் என நினைத்த லட்சுமி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டது தெரிந்தது.
