×

இந்தியாவிலேயே முதன்முறையாக: அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு டிரோன், செயற்கைக்கோள் ஆய்வகம்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி துறையில், ‘வானவில் மன்றம்’ என்ற அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தை,  கடந்த ஆண்டு நவம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதன்  ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள அரசு மாதிரி  மேல்நிலை பள்ளியில், ஆளில்லா விமானம் (டிரோன்) மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப  பயிற்சி ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை கல்வி அலுவலர்  மார்ஸ் தலைமையில் நடந்த இந்த விழாவில், ஆய்வகங்களை, தமிழ்நாடு அறிவியல்  தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி  அண்ணாத்துரை திறந்து வைத்தார்.

இந்தியாவில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் முறையாக, அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை சார்பில், ரூ.20 லட்சம் நன்கொடையில், இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில்,  மாணவர்கள் அறிவியல் காட்சிகளை பார்க்க ஸ்மார்ட் திரை வகுப்பறையும்,  வீடியோக்கள் உருவாக்க ஸ்டூடியோ ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவர்கள், டிரோன்களை இயக்கி, செயல்முறை விளக்கம் அளித்தனர்.  மேலும், 4 அரசு பள்ளிகளில் டிரோன் தொழில்நுட்ப ஆய்வகங்கள்  துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  ஆய்வகங்களில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு டிரோன் தொழில்நுட்பம், சிறிய ரக செயற்கைக்கோள் உருவாக்குதல்  போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதற்காக, தன்னார்வ பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர், என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் கூறுகையில், ‘‘மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல்  குறித்த செய்முறை பயிற்சி தரப்பட்டது. அதன் வாயிலாக மாணவர்களே வடிவமைத்த  ராக்கெட் மாதிரிகள், சிறிய ரக  டிரோன்கள் வானில்  பறக்கவிடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்த டிரோன் மற்றும் சிறிய ரக செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சியில் மாணவர்கள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்,’’ என்றார். இதுகுறித்து அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை நிர்வாகிகள் மேத்யூ ஜோசப்,  பாஸ்கரன் ஆகியோர் கூறுகையில், ‘‘இந்தியாவிலேயே  முதன்முதலாக சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில்தான் ஸ்டெம் வகை ஆய்வகம்  அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டுவதன்  மூலமே இளம் விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்,’’ என்றார்.


Tags : India ,Drone , First in India: Drone, Satellite Lab for Govt School Students
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...