×

சென்னையில் முதற்கட்டமாக 18 சாலைகளை குப்பையில்லா சாலையாக பராமரிக்க முடிவு: மேயர் பிரியா தகவல்

சென்னை: முதற்கட்டமாக 18 சாலைகளை, 11ம் தேதி முதல் முதல் குப்பையில்லா  சாலைகளாக பராமரிக்க மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். பெருநகர  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200  மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர்,  அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட  பகுதிகளில் மாநகராட்சி சார்பிலும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி  மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் சார்பிலும், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும்  அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் சென்னை  என்விரோ நிறுவனத்தின் சார்பிலும் தூய்மைப்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்  மூலமாக நாள்தோறும் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளாக  பெறப்படுகிறது. மேலும், மாநகராட்சி சார்பில் முக்கிய பகுதிகளில்  குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு சேகரமாகும் குப்பைகள் லாரிகள் மூலம்   கொண்டு செல்லப்படுகின்றன. தனியார் கடைகள், அங்காடிகள்  மற்றும் வணிக வளாகங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக  சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்திலான இரண்டு குப்பை தொட்டிகளை  வைக்க மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவுகளை  சாலை மற்றும் பொது இடங்களில் கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க  மாநகராட்சியின் சார்பில் மேற்குறிப்பிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மையில்  அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற  திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக  18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு  மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத்  தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில்  தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில்  ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல்  போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த 18 சாலைகளில் குப்பையில்லா  பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கி.மீ. நீள சாலைகள், 196 பேருந்து  நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட  உள்ளன. இந்த 18  சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க ஏதுவாக 442 சிறிய வகையிலான குப்பைத்  தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,Mayor ,Priya , In the first phase, 18 roads in Chennai have been decided to be maintained as garbage-free roads: Mayor Priya informs
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!