×

பாப்பாரப்பட்டியில் அட்டகாசம் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடிப்பு: மலை கிராம மக்கள் நிம்மதி

தர்மபுரி: பாப்பாரப்பட்டி அருகே அட்டகாசம் செய்து வந்த மக்னா யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கடந்த 4 மாதங்களாக, 2 யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தும் வந்தன. பாப்பாரப்பட்டி அருகே சோமனஅள்ளி பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முகாமிட்டிருந்த அந்த யானைகள், கூகுட்டமரதஅள்ளி கிராமத்தில், விவசாயி ஒருவரை தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால், யானைகளை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இரு யானைகளில் ஒன்று மக்னா யானை.

அந்த யானைக்கு ஏற்கனவே கர்நாடக மாநில வனத்துறையினர் ஜிபிஎஸ் கருவி பொருத்தியுள்ளது தெரியவந்தது. இதன்மூலம் கண்காணித்தபோது, நேற்று அதிகாலை, மொரப்பூர்-பிக்கிலி வனப்பகுதிக்கு இடையே சக்கிலிநத்தம் அருகே ஈச்சம்பள்ளம் பகுதியில் முகாமிட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அப்பாலா நாயுடு மற்றும் பாலக்கோடு, ஒகேனக்கல், தர்மபுரி ரேஞ்சர்கள், கால்நடை டாக்டர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர்.

அப்போது, மக்னா யானையுடன் இருந்த பெண் யானை தப்பியது. மக்னா யானை மட்டும், அந்த பகுதியில் உள்ள புளியமரம் அருகே சுற்றி வந்தது. அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கும்கி யானை சின்னத்தம்பியும் அங்கு வரவழைக்கப்பட்டது. மக்னா யானை மீது, ஏர்கன் மூலம் 4 மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. ஆனாலும், அசராத மக்னா யானை அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தது.

பின்னர், காலை 8 மணியளவில் அரை மயக்கத்தில் காணப்பட்ட யானையை, கும்கி யானை மூலம் வனத்துறையினர் லாரியில் ஏற்றி, பொள்ளாச்சி அருகே ஆனைமலை முகாமிற்கு கொண்டு சென்றனர். மக்னா யானை பிடிபட்டதால், மலை கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். தொடர்ந்து மற்றொரு யானையை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tags : Papbarpatti , Magna elephant captured by Atakasam anesthetic injection in Papbarpatti: Hill villagers relieved
× RELATED சென்னையிலிருந்து கொல்லம் விரைவு...