சென்னை: பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள பிளஸ் 1 மாணவர்கள், தாங்கள் அளித்துள்ள விவரங்களில் திருத்தங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால், 10ம் தேதிக்குள் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10 , பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கிறது. இந்த தேர்வுகளில் பங்கேற்க உள்ள பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் தங்கள் விவரங்களை தெரிவித்துள்ளனர்.
பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவியரின் பெயர்கள் தற்போது தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியல்களில் இடம் பெற்றுள்ள மாணவ-மாணவியரின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதாவது திருத்தம் செய்ய விரும்பினால் அவற்றை 10ம் தேதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மூலமாக மேற்கொள்ள வேண்டும். இதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செய்து முடிப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.