வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு உத்தரவு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் எடுத்து கொண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து, 3 மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 6 உறுப்பினர்களை கொண்ட ஆணையமாக மாற்றியமைக்கப் பட்டு அதன் செயல்படுகள் குறித்த விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 68 மற்றும் 73 ஆகிய பத்திகளை கூர்ந்து கவனித்ததில், மாநில அரசு உள் இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்க முடியாது.

ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இடையே உள் இடஒதுக்கீடு வழங்குவதை குறித்து தீர்மானிக்கும்போது சரியான தரவுகளை சேகரித்து முறையாக வழங்கப்படுகிறதா என கவனிக்க வேண்டும். மாநில அரசு, எந்த ஒரு தனி வகுப்பினரோ அல்லது பல வகுப்பினரை ஒரு குழுவாக வகைபடுத்தி சிறப்பு சலுகைகள் வழங்கலாம் ஆனால் அவை வகைப்படுத்தும் போது மேலாட்டமாக இல்லாமல், தவறாக வழிநடத்துவதாக இல்லாமல் ஆழமாக ஆய்வு செய்திட வேண்டும்.

இந்த தீர்ப்பின் சாராம்சங்கள்  குறித்து கவனமாக ஆய்வு செய்த அரசு அதனை கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. மேலும்  பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் வகுப்பிற்குள் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த கோரிக்கைகளை ஆய்வு செய்யும் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சங்களையும் உள்ளீடாக எடுத்து கொண்டு அரசுக்கு 3 மாதத்திற்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: