×

அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு

புதுடெல்லி: அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது.

இவற்றை முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இனிமேல் முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு உடல் தகுதித் ர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும்.

மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தை குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முறையில் வருகிற ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர். இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

Tags : Agni , Agni Soldier Jobs, First Entry Test, Army Notification
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...