வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்: பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில், முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். தைப்பூசத்தன்று முருகப் பெருமான் தரகாசுரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக பழனியில் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

அத்தகைய சிறப்பு பெற்ற தைப்பூச திருவிழா சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று கோலாலகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அதிகாலையில் மூலவர், உற்சவருக்கு, சிறப்பு சந்தனக்காப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பலர் பன்னீர், புஷ்பக்காவடி எடுத்தனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

மேலும் ஏராளமானோர் மொட்டை போட்டும், அலகு குத்தியும், தேர் இழுத்தும், பூக்குழி இறங்கியும், அன்னதானம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இரவு 8.30 மணியளவில் பழனி ஆண்டவர் நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல சென்னை முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனால், காலை முதல் இரவு வரை பக்தர்களின் கூட்டம் அனைத்து முருகன் கோயிலிலும் காணப்பட்டது.

Related Stories: